கோலாலம்பூர், ஜூலை 11 – நட்பு ஊடகமான பேஸ்புக், மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்று யார் வேண்டுமானாலும், யாருடனும் அவர்களின் அனுமதியுடன் நட்பு கொள்ள முடியும். மற்றொன்று, ஒருவர் வெளியிடும் புகைப்படமோ அல்லது பதிவுகளோ நமக்கு பிடித்து இருந்தால் நம்மால் அதனை ‘லைக்’ (Like) செய்யவும், பகிர்ந்து (Share) கொள்ளவும் முடியும்.
தற்போது நட்பு வட்டத்தில் லைக் பெறுவதற்காகவே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இது பல சமயங்களில் நமக்கு எரிச்சலையும் ஏற்படுத்தும். விவாதத்திற்குரியது இந்த அம்சத்தை வாட்ஸ்அப்பிலும் மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏடிஎஸ்எல் ஸோனில் (ADSL Zone) வெளியான மார்க் அஸ் அன்ரீட் செட்டிங்க்ஸ்
வாட்ஸ்அப்பில் நாம் புகைப்படங்களை பகிரும் போதோ அல்லது காட்சிப் படத்தை (Display Picture) மாற்றும் போதோ, நமது குழுவில் (Group) உள்ளவர்கள் எழுத்துரு(Text) மூலமாகவே தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், புகைப்படங்களை லைக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தினால் எப்படி இருக்கும்? என்ற யோசனையை உடனடியாக மேம்படுத்த வாட்ஸ்அப் முயற்சித்து வருகிறது.
அதேபோல், வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட ஒரு வசதி சில சமயங்களில் விரும்பத்தகாத பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடுகிறது. அது என்னவென்றால், ஒருவர் அனுப்பும் குறுந்தகவலை நாம் படித்துவிட்டோமா? இல்லையா? என்பதை தெள்ளத்தெளிவாக காட்டும் நீல நிற குறியீடு தான். எதிர்முனையில் இருப்பவர் குறுந்தகவலை படித்துவிட்டார் என்றால் இரண்டு நீல நிற ‘டிக்’ குறிகள் வந்துவிடும். அவசரகதியில் நம்மால் பதில் அனுப்ப முடியவில்லை என்றால், நாம் நண்பரின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
இந்நிலையில், நாம் படித்த செய்தியை படிக்காத ஒன்று போல் மாற்றிக் கொள்ளும் வசதியையும் செயல்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்சமயம் இந்த வசதி ‘மார்க் அஸ் அன்ரீட்’ (Mark as Unread) என்று அழைக்கப்படுகிறது. எனினும், இந்த வசதிகள் எப்போது மேம்படுத்தப்படும் என்பது பற்றிய செய்திகள் இன்னும் வெளிவரவில்லை.