கோலாலம்பூர், ஜூலை 11- 1எம்டிபி நிதியைக் கொண்டு முறைகேடாகப் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தி வரும் சிறப்பு நடவடிக்கைக் குழு, டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரின் வங்கிக் கணக்குகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது.
விசாரணைப் படலத்தின் ஓர் அங்கமாகப் பிரதமர் மனைவியின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து வருவதாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சிறப்பு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதி வரையிலான காலத்தில், ரோஸ்மாவின் அஃப்பின் வங்கிக் கணக்கில் 2 மில்லியன் ரிங்கிட் தொகையை ரோஸ்லன் என்ற நபர் செலுத்தியதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில் ரோஸ்மாவின் வங்கிக் கணக்கு ஆராயப்பட்டது என்ற தகவலைச் சிறப்பு நடவடிக்கைக் குழு உறுதி செய்துள்ளது.
“1எம்டிபி விவகாரம் தொடர்பில் ஊடகங்களில் எத்தகைய செய்த வெளியானாலும் அதுகுறித்துத் தீவிரமாக விசாரிக்கப்படும். சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.
“1எம்டிபி விவகாரம் குறித்து வெளிப்படையான, சுதந்திரமான, நிபுணத்துவத்துடன் கூடிய விசாரணை நடைபெறும். ஊடகங்களில் செய்தி வெளியாகும் முன்பே பிரதமரின் வங்கிக் கணக்கு குறித்துச் சிறப்பு நடவடிக்கைக் குழுவுக்குத் தெரியும்.
“எனவே தேசிய வங்கி, அரச மலேசியக் காவல்துறை மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை குறித்து யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள் எனக் கூட்டு நடவடிக்கைக் குழு நம்புகிறது,” என அக்குழு வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.