கோலாலம்பூர், ஜூலை 11 – நேற்று தொடங்கிய மஇகா கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும், இன்றும் நாளையும் திட்டமிட்டபடி வேட்புமனுத் தாக்கல் தொடர்ந்து நடைபெறும் என்றும் மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரா அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மஇகா கிளைத் தலைவர்களுக்கு இன்று தான் அனுப்பிய செல்பேசி மூலமான குறுஞ்செய்தியில் டாக்டர் சுப்ரா இன்றும் நாளையும் வேட்புமனுத் தாக்கல்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று கெடா, கிளந்தான், திரெங்கானு மாநிலங்களில் உள்ள மஇகா கிளைகளின் வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெற்று முடிந்தன. இதில் கெடா மாநிலத்தில் மட்டுமே சுங்கைப்பட்டாணியில் ஒரு சில அசம்பாவிதங்கள் நடந்தன.
இன்று, மலாக்கா, ஜோகூர், பேராக் ஆகிய மாநிலங்களில் உள்ள கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெறுகின்றன.
நாளை ஞாயிற்றுக்கிழமை ஜூலை 12ஆம் தேதி சிலாங்கூர், பினாங்கு, பெர்லிஸ், கூட்டரசுப் பிரதேசம், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெறுகின்றன.