சிங்கப்பூர், ஜூலை 11 – ‘ஸ்பெர்ம் வேல்’ என்று அழைக்கப்படும் அரிய வகை திமிங்கலம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை காலை சிங்கப்பூரின் ஜூராங் தீவு கடலில் இறந்த நிலையில் மிதந்துள்ளது.
இதற்கு முன்பு இந்த அரிய வகை திமிங்கலம் சிங்கப்பூரிலோ அல்லது மலேசியா தீவிலோ கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், சிங்கப்பூர் கடற்படை மற்றும் துறைமுக ஆணையம் ஆகியவற்றின் உதவியோடு, அந்த திமிங்கலம் துவாஸ் கடல் மாற்று நிலையத்திற்கு ஆய்வுக்காக இழுத்து வரப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரம் வரை அந்த இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்தத் திமிங்கலத்தின் உடலில் இருந்து ஆய்வுக்காக திசுக்கள் எடுக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
இது குறித்து சிங்கப்பூர் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த அறிவியல் ஆய்வு அதிகாரி ஃபூ மாசெங் கூறுகையில், “அந்தத் திமிங்கலத்தின் வயிற்றுப் பகுதியில் இருக்கும் பொருட்களைக் கண்டறிந்தால் அது எங்கிருந்து வந்தது. எந்த ஆழத்தில் இருந்து வந்துள்ளது ஆகியவற்றைக் கண்டறியமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.
அந்தத் திமிங்கலம் சுமார் 7 முதல் 10 டன் எடையிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
படம்: லீ கோங் சியான் பேஸ்புக்