Home நாடு 90ஆவது பிறந்தநாள்: குடும்பத்தாருடன் அமைதியாகக் கொண்டாடிய மகாதீர்

90ஆவது பிறந்தநாள்: குடும்பத்தாருடன் அமைதியாகக் கொண்டாடிய மகாதீர்

756
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 12- முன்னாள் பிரதமர் துன் மகாதீர் நேற்று சனிக்கிழமை தமது 90ஆவது பிறந்தநாளைக் குடும்பத்தாருடன் மிக அமைதியான, எளிமையான முறையில் கொண்டாடினார்.

இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படத்தை அவரது மகன் முக்ரிஸ் மகாதீர் தனது நட்பு ஊடகப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

Mahathir-90-birthday-crop

#TamilSchoolmychoice

“90-ஆவது பிறந்தநாள் காணும் தந்தைக்கும், 89-ஆவது பிறந்தநாள் காணும் தாயாருக்கும், ஏழாவது பிறந்த நாள் கொண்டாடும் மியாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என முகநூல் பதிவில் முக்ரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாடும் இம்மூவரும் நீண்ட காலம் நலமாகவும், வளமாகவும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் எனத் தாம் விரும்புவதாகவும் முக்ரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மகாதீரின் மகள் டத்தின் படுகா மரினா மகாதீரும் தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

“எனது அன்பான தந்தைக்கு, இனிய 90ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதுமே மனதுக்குச் சரியெனப் பட்டதைச் செய்யும் தைரியமும், பலமும் கொண்டவர். இது உங்களது அன்பான பிள்ளைகள், பேரக் குழந்தைகள் மற்றும் புதிதாக வருகை தந்துள்ள கொள்ளுப் பேத்தியுடனும் இனிதே கழிக்க வேண்டிய தருணம். உங்களை மிகவும் நேசிக்கிறேன்,” என மரினா மகாதீர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை மகாதீரின் பிறந்தநாளைக் குடும்பத்தாரே கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர், தங்களுடையது பெரிய குடும்பம் என்றாலும், பிறந்தநாள் நிகழ்வு சிறிய அளவில் நடைபெற்றதாகக் கூறியுள்ளார்.

குடும்பத்தார் மட்டுமல்லாது, நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும், மலேசியாவில் நீண்டகாலம் பிரதமராகப் பணியாற்றிச் சாதனை படைத்த மகாதீருக்குச் சமூக ஊடகங்கள் வழித் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.