Home நாடு ஜசெகவுடனான உறவை அதிகாரப்பூர்வமாகத் துண்டித்துக் கொண்ட பாஸ்

ஜசெகவுடனான உறவை அதிகாரப்பூர்வமாகத் துண்டித்துக் கொண்ட பாஸ்

750
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 12- ஜசெகவுடனான உறவைத் துண்டித்துக் கொள்வது எனப் பொதுப் பேரவையில் எடுக்கப்பட்ட முடிவைப் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர்களின் மன்றம் (Syura Council -ஷூரா மன்றம்) ஏற்றுக் கொண்டுள்ளது.

PAS-Logo-Sliderபாஸ் கட்சியின் உச்சகட்ட பலம் வாய்ந்த அமைப்பாக இந்த ஆன்மீகத் தலைவர்களின் மன்றம் செயல்படுகின்றது.

இதையடுத்துக் கடந்த ஒருமாதமாகப் பக்காத்தான் கூட்டணியில் நீடித்து வந்த சலசலப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

#TamilSchoolmychoice

பக்காத்தான் கூட்டணியின் கட்டுப்பாடுகளை மீறி, பாஸ் குறித்து ஜசெக கடுமையாக விமர்சித்ததால், தாங்கள் மிகுந்த வருத்தமடைந்ததாகவும், அதன் காரணமாகவே இத்தகைய முடிவை எடுக்க நேரிட்டது என்றும் டத்தோ டாக்டர் நிக் சவாவி சாலே தெரிவித்தார்.

பாஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்கள் குறித்தும் ஜசெக தொடர்ந்து விமர்சித்து வந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எனவே, பாஸ் ஆன்மீக மன்றம் ஜசெகவுடனான அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பைத் துண்டித்துக் கொள்ள முடிவு செய்தது. அதேசமயம் பிகேஆருடனான எங்களது உறவு நீடிக்கும்,” என அம்மன்றத்தின் செயலாளருமான நிக் சவாவி, சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிற அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சார்பற்ற இஸ்லாமிய இயக்கங்கள் எதுவானாலும், அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பு என்ற வகையில் இணைந்து செயல்பட பாஸ் தயார் என்று குறிப்பிட்டுள்ள அவர், யாருடன் இணைந்து செயல்பட்டாலும், பாஸ் கட்சி தனது இஸ்லாமியக் கொள்கைகளை உறுதியுடன் பின்பற்றும் என்றார்.

தற்போது ஆன்மீக மன்றம் எடுத்துள்ள முடிவு கட்சியின் மத்தியச் செயலவைக்குத் தெரியப்படுத்தப்படும் என்றும், அதன் பிறகே இந்த முடிவு செயல்படுத்தப்படும் என்றும் நிக் சவாவி மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.