சென்னை, ஜூலை 13- கல்லீரல் பாதிப்புக்குச் சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கிச்சை பெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான ஏற்பாடுகளைக் கவனிக்கத் தமிழக அரசின் மூத்த அதிகாரிகள் சிலர் தற்போது சிங்கப்பூரில் முகாமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இரு தினங்களுக்கு முன்னர் பரபரப்புத் தகவல் வெளியானது. இதனால் அதிமுகவினர் நிலைகொள்ளாது தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்துப் பல்வேறு விதமான தகவல்கள் உலா வருகின்றன. எனினும் அவை குறித்தோ, அவரது உடல்நிலை குறித்தோ அதிமுக தலைமையும், தமிழக அரசுத்தரப்பும் இதுவரை வாய் திறக்கவில்லை.
இத்தனைக்கும் தமிழக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பாசத்துடனும், பல்வேறு கேள்விகளை எழுப்பியும் அறிக்கைகள் வெளியிட்டு, தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில், ஜெயலலிதாவின் அண்மைய மருத்துவ அறிக்கையுடன், அவரது நம்பிக்கைக்குரிய தமிழக அரசு அதிகாரிகள் சிலர் சிங்கப்பூர் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை நிர்வாகத்துடன் அவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், ஜெயலலிதாவுக்கு எத்தகைய சிகிச்சை அளிப்பது என்பதை முடிவு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிகிச்சை குறித்த ஏற்பாடுகள் முடிவடைந்த கையோடு, ஜெயலலிதா சிங்கப்பூருக்குச் செல்வார் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்லீரல் பாதிப்புடன், ஜெயலலிதாவின் மற்ற சில உடல் பாகங்களும் வலுவிழந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே கல்லீரலுக்கான சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்னர், அவருக்குத் தெம்பளிக்கும் விதமாகச் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிகிறது.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வெளிவரும் பல்வேறு தகவல்கள் காரணமாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே அதிர்ச்சி நிலவி வருகிறது.