சென்னை, ஜூலை 13 – தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக, தமிழ் நாட்டில் ஜெயலலிதாவின் அலை பரவுவதை உணர்ந்த திமுக தலைவர் கருணாநிதி, இத்தாலியைச் சேர்ந்த ஹேக்கிங் நிறுவனம் ஒன்றின் மூலம் அதிமுக-வையும், ஜெயலலிதாவையும் வேவு பார்த்ததாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் ஜெயலலிதாவின் அலை பரவியதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகள் பற்றியும், வாக்கு வங்கிகள் பற்றியும் அறிந்து கொள்ள நினைத்த கருணாநிதி, இத்தாலியின் பிரபல ஹேக்கிங் நிறுவனத்தைச் சேர்ந்த இரு நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார். அவர்கள் மார்ச் 9, 2011-ம் ஆண்டு சென்னை வந்தனர்.”
“அங்கு அவர்கள், உளவுத்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்கும் கருவிகள் குறித்தும், ஹேக் செய்வது குறித்தும் விளக்கம் அளித்தனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
விக்கிலீக்ஸின் இந்த தகவலால், தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்டுள்ளன.