Home கலை உலகம் தலைமுறைகளைப் பாதுகாக்க மதுக்கடைகளை மூடுங்கள்- கவிஞர் வைரமுத்து

தலைமுறைகளைப் பாதுகாக்க மதுக்கடைகளை மூடுங்கள்- கவிஞர் வைரமுத்து

1053
0
SHARE
Ad

vairamuthuசென்னை, ஜூலை 13- கவிஞர் வைரமுத்து அவர்களின் பிறந்தநாளைக் கவிஞர்கள் தினமாகக் கொண்டாடுவது வழக்கம்.

கவிஞரின் பிறந்த நாளை முன்னிட்டு வெற்றித் தமிழர் பேரவை சார்பில் ‘கவிஞர்கள் திருநாள்’ விழா சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகையில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு, குஜராத் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி பு.ரா.கோகுல கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

#TamilSchoolmychoice

ஒவ்வோர் ஆண்டும் ஒரு சிறந்த கவிஞரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குக் கவிஞர் வைரமுத்து பொற்கிழியும் விருதும் வழங்குவார். அவ்வகையில், 2015-ம் ஆண்டுக்கான ‘கவிஞர்கள் திருநாள்’ விருதும் ரூபாய் 25000 பணமுடிப்பும் கவிஞர் சல்மாவுக்கு வழங்கப்பட்டது.

சல்மாவுக்கு விருதினை வழங்கிக் கவிஞர் வைரமுத்து சிறப்புரை ஆற்றிப் பேசியதாவது:-

பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வைரமுத்துவின் பெருமைக்காக அல்ல. ஏனென்றால் எனக்கு என்று எந்த ஒரு பெருமையும் இருப்பதாக நான் ஒரு போதும் கருதாதவன். நான் ஒரு வேலைக்காரன். தமிழுக்கும், தமிழர்களுக்கும் தன்னை மறந்து வேலை செய்கிற ஒரு வேலைக்காரன். இந்த வேலைக்காரனுக்கு என்ன பெருமை இருக்கப் போகிறது?

இன்றைக்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய பின்னடைவு எது? என்று யோசித்துப் பார்த்தேன்.

கணிப்பொறி கூட பின்னடைவு அல்ல. கணிப்பொறியில் கவிதையை தட்டி விட்டால் கவிதை வருகிறது. செல்போனிலும் கவிதை வருகிறது. ‘வாட்ஸ்-அப்’பிலும் கவிதை வருகிறது. மொழி எங்கும் இருக்கிறது.

மொழி எந்த இடத்தில் இல்லை என்றால் மதுசாலைகளில் தான். மது குடிக்கிறவர்கள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக மனித வாழ்க்கை துண்டாடப்படுகிறது.

ஒரு செய்தி, 4 வயதுச் சிறுவன் ஒருவனுக்கு மது குடிக்குமாறு பாதகர்கள் கட்டாயப்படுத்தி ஊற்றி இருக்கிறார்கள் என்று.

கோவையில் ஒரு பள்ளி மாணவி குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்டார் சீருடையோடு என்கிறபோது பாதிப்பு யாருக்கு?

இதைப் பார்த்தால் அடுத்த தலைமுறையில் குடிக்காதவன் எத்தனை பேர் இருப்பான்? என்று யோசிக்க வைக்கிறது. ஒரு ஊரில் குடிகாரன் யார்? என்று கேட்டால், கோடி வீடு என்றார்கள் ஒரு காலத்தில்!

இன்றைக்குக் குடிக்காதவன் வீடு எது? என்றால் தேடிப் பார்த்துச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மது, மனித வளத்தைக் குறைக்கிறது; நாகரிகத்தைக் குறைக்கிறது; இலக்கியவாதிகளைக் குறைக்கிறது;கல்வியைக் குறைக்கிறது.

போரில் அதிகமான விதவைகள் உண்டானது இலங்கையில்; பாரில் அதிகமான விதவைகள் உண்டாவது தமிழ்நாட்டில்!

அரசுக்கு ஒரு கோரிக்கை, இந்த நாடு மேம்பட வேண்டும் என்றால், நம்முடைய மனித வளம் முழுமை பெற வேண்டும் என்றால் மதுசாலைகளை மூட வேண்டும் என்பதை என்னுடைய பிறந்தநாள் செய்தியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். தலையைப் பாதுகாக்கக் தலைக்கவசத்தைப் போடுங்கள்; ஒரு தலைமுறையைப் பாதுகாப்பதற்கு மதுச்சாலைகளை மூடுங்கள்”

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.