நியூ யார்க், ஜூலை 13 – அமெரிக்காவிற்கான வழித்தடங்களை கண்டறிந்தவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்று இதுநாள் வரை கூறப்பட்டு வந்த நிலையில், கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சீனர்கள் அமெரிக்காவை கண்டுபிடித்துவிட்டதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள பழங்கால உரைகளில், ஐரோப்பியர்கள் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்பே சீனர்கள் அமெரிக்காவிற்கு வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜான் ரஸ்கேம்ப் என்ற கல்வெட்டு ஆராய்ச்சியாளர் இது தொடர்பாக கூறுகையில், “கொலம்பஸ் 1492-ல் புதிய உலகத்திற்கு வந்தார். ஆனால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 1300-களில் ஆசியர்கள் அமெரிக்காவிற்கு வருகை புரிந்துள்ளனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கால சீன உரைகளின் படி, கொலம்பஸ் வருவதற்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே சீனர்கள் அமெரிக்காவிற்கு வந்துள்ளனர்.”
“புதிய மெக்ஸிகோவின் மத்திய நகரான ஆல்பகர்க்யூவில் கிடைத்த பழங்கால பாறைகளில் குறிப்பிடத்தகுந்த உரைகள் எழுதப்பட்டுள்ளன. வரலாறுகளை ஆராய்ந்து பார்க்கையில் அவை, சீனர்களின் ஆவணப்படுத்தும் முறைகள் என கண்டறியப்பட்டுள்ளது. அதில் தான் அமெரிக்காவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், பல்வேறு தொல்லியல் நிபுணர்கள் அவரின் கூற்றை ஏற்க மறுத்து வருகின்றனர். ஜான் ரஸ்கேம்ப்பின் கூற்றுகளில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.