சென்னை, ஜூலை 13- திமுக ஆட்சிக் காலத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிமுக அலுவலகத் தொலைபேசிப் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பதற்காக இத்தாலி நிறுவனத்திடம் திமுக உதவி கேட்டதாக விக்கிலீக்ஸ் தனது இணையதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாகத் திமுக தலைவர் கருணாநிதி உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஆட்சியில் இருந்த போது உளவு பார்ப்பதற்காக நவீன கருவிகள் வாங்கப்பட்டதாக எழுந்த புகாரினைத் திமுக மறுத்துள்ளது.
இது தொடர்பாகப் பேட்டி அளித்த அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், “அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுவதை விக்கிலீக்ஸ் வழக்கமாகக் கொண்டுள்ளது.
விக்கிலீக்ஸ் பொய் சொல்கிறது. அதிமுக தொலைபேசிப் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்படவில்லை. விக்கிலீக்ஸ் போலியான தகவல்களை வெளியிடும் ஒரு போலி நிறுவனம். இந்தியாவில் ஏராளமான தலைவர்கள் மீது விக்கிலீக்ஸ் இதுபோல் குற்றம்சாட்டி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.