அரசியல்தலைவர்களின் பதிவுகளைக் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும் ஆவலுடன் பார்த்து, தங்களின் ஆதரவையும், எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பல வருடங்களாக இதுபோன்ற வலை தளங்களில்ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் தற்போது பேஸ்புக்கில் இணைந்துள்ளார். இந்த வலைதளத்தில், ‘vijayakanthdmdkparty’ என்ற பெயரில், தன் கருத்துக்களை அவர் வெளியிடத் தொடங்கியுள்ளார்.
பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட முதல் பதிவில், “அனைவருக்கும் வணக்கம். இது, என் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கம். இதன் மூலம் கட்சியின் அறிவிப்புகள், நிகழ்வுகள் மற்றும் கருத்துகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
அடுத்ததாக, உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும், தன் நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் நலம் பெற வேண்டி, உருக்கமான கருத்தையும் பதிவு செய்துள்ளார்.
எளிதில் அணுக முடியாத நபராகக் கருதப்பட்ட விஜயகாந்த், தன்னைச் சமூக வலைதளத்தில் இணைத்துக் கொண்டுள்ளது, அவரது கட்சியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்- சட்டென்று கோபபபடக் கூடியவர் தன் மீதான எதிர்மறை விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.