Home அவசியம் படிக்க வேண்டியவை அமரர் சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகள் மின்பதிவுகளாக ஆகஸ்ட் 8இல் வெளியீடு!

அமரர் சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகள் மின்பதிவுகளாக ஆகஸ்ட் 8இல் வெளியீடு!

1762
0
SHARE
Ad

unnamed

கோலாலம்பூர், ஜூலை 13 – அமரர் இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் படைப்புகள், மின்-பதிவுகளாக மாற்றப்பட்டு, ‘நல்லார்க்கினியர் நற்பதிவுகள்’ எனும் பெயரில் – அதன் வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி, தலைநகர்  துன் சம்பந்தனார் மாளிகையின் சோமா அரங்கில் நடைபெறவுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. அச்சந்திப்பில் செல்லியலின்  தொழில் நுட்ப வடிவமைப்பாளரும், இணை தோற்றுநருமான முத்து நெடுமாறன், உத்தமம் மலேசியா தலைவர் சி.ம.இளந்தமிழ், செல்லியல் தகவல் ஊடகத்தின் இணை தோற்றுநரும் நிர்வாக ஆசிரியருமான இரா.முத்தரசன், ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளி’ நூல் வெளியீட்டு விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், மின்னல் பண்பலை அறிவிப்பாளருமான பொன் கோகிலம், ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் இரா தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

இச்சந்திப்பில் சீனி ஐயாவின் படைப்புகள் மின் நூலாவது குறித்த விளக்கங்கள் வழங்கிய முத்துநெடுமாறன், பின்வருமாறு தெரிவித்தார்:-

“சீனி ஐயாவின் படைப்புகளை நிரந்தரமாக்குவது எங்களின் முதல் நோக்கம். இரண்டாவது நமது நாட்டில் நிறைய பேர் பட்டப்படிப்பு, ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் உள்நாட்டு படைப்புகளைப் பற்றிய ஆய்வுகள் செய்யும் போது அதற்கான தரவுகளைத் தேடுகிறார்கள். உதாரணமாக, சீனி ஐயாவின் தொல்காப்பிய சிந்தனைகள் பற்றி ஆய்வுகள் செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஆய்வு செய்யும் போது இந்த மின்பதிப்புகள் அவர்களுக்கு நிச்சயம் உதவும்.”

“மூன்றாவது, சற்று தூர நோக்குச் சிந்தனை கொண்டது, அதாவது நமது நாட்டில் நிறைய அறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பல நல்ல நூல்களை எழுதியிருக்கிறார்கள். அதெல்லாம் அவர்களுக்குப் பிறகு எங்குமே இல்லாமல் போய் விடுகின்றது. மலேசிய இலக்கிய வரலாறு, மலேசியப் படைப்பாளர்களின் வரலாறு என்று தேடும் பொழுது தரவுகள் கிடைப்பதில்லை. எனவே மலேசியப் படைப்புகளையெல்லாம் மின்பதிப்புகளாக மாற்ற, மற்றவர்களுக்கு இது ஒரு தூண்டு கோலாக அமைய வேண்டும் என்பது எங்களின் மூன்றாவது நோக்கம்”

அவரைத் தொடர்ந்து பேசிய இளந்தமிழ் “சீனி ஐயா போன்ற அறிஞர்களின் படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் இதை செய்கின்றோம்” என்று தெரிவித்தார்.

ஆகஸ்ட் 8-ம் நாள் மின்பதிவுகள் வெளியீடு

கடந்த ஆண்டு புகழுடம்பெய்திய இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் ‘உங்கள் குரல்’ இதழ்கள் அனைத்தையும் மின்-பதிவுகளாக உருவாக்கும் திட்டம், ஓராண்டு கால முயற்சிக்குப்பின் முழுமை பெற்று 8-8-2015ஆம் நாள் கோலாலம்பூரில் ‘நல்லார்க்கினியர் நற்பதிவுகள்’ எனும் பெயரில் வெளியீடு காணவுள்ளது. மலேசிய மின்னூடகமான ‘செல்லியல்’ நிறுவனமும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் மலேசியக் கிளையும் சேர்ந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வெளியிடுகின்றனர்.

இறையருட் கவிஞரின் அளப்பரிய தமிழ்ப் பணிகள், தமிழ்கூறு நல்லுலகில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. அவரின் எழுத்து, பேச்சு, வானொலி நிகழ்ச்சிகள், வகுப்புகள், பட்டறைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற ஊடகங்கள் வழி அவர் பகிர்ந்த அறிவு, ஊர் ஊராகச் சென்று அவர் நடத்திய தொல்காப்பிய வகுப்புகள், ‘உங்கள் குரல்’ இதழின் வழி அவர் அள்ளித்தந்த செல்வம் – இவற்றை மலேசியர்களாலும், உலகளாவிய தமிழ் ஆர்வலர்களாலும் என்றென்றும் மறத்தல் இயலாது.

கவிஞரின் எழுத்து வழியிலான கருத்தோவியங்களுக்கு ஒரு நிலையாய பதிவு இருத்தல் வேண்டும் எனும் இலக்கோடும், அவர் விட்டுச்சென்ற செல்வம் அடுத்தடுத்த ஆக்கங்களுக்கு வித்திட வேண்டும் எனும் தொலைநோக்கோடும்  2014ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த மின் பதிவாக்கத் திட்டத்தை ‘செல்லியல்’ மின்னூடகமும், உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் (உத்தமம்) மலேசியக் கிளையும் முன்மொழிந்து, செயல்வடிவம் கொடுக்க முன்வந்தன.

செல்லியல் நிறுவனத்தின் இணைத் தோற்றுநரும், தொழில் நுட்ப வடிவமைப்பாளருமான முத்து நெடுமாறன் முதல் கட்டமாக 10,000 ரிங்கிட் நிதி உதவிவழங்கியதொடு, சீனி ஐயாவின் படைப்புகளை மின் நூலாக்கும் திட்டத்திற்கான தொழில் நுட்பப் பங்களிப்பை வழங்கவும் முன்வந்தார்.

‘உத்தமம்’ மலேசியக் கிளையின் தலைவர் சி.ம.இளந்தமிழ் இத்திட்டத்திற்கான இணைத் தலைமை ஏற்றதோடு, ‘உத்தமம்’ சார்பிலான அனைத்து நிலை ஆதரவையும் வழங்கி வருகின்றார்.

இந்த மின்பதிவுத் திட்டத்திற்கான தொழில்நுட்பச் செயலாக்கங்களை, ‘முரசு அஞ்சல்’ செயலியை வெளியிட்ட முரசு நிறுவனமும், ‘ஓம்தமிழ் தொலைக்காட்சி’ நிறுவனமும் இணைந்து வழங்கியுள்ளன.

சீனி ஐயாவின் மறைவுக்குப் பின்னர், உடனடியாகக் கருத்து வடிவம் கண்ட இந்தத் திட்டத்தை, ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற இலக்குடன் தொடங்கிய திட்டக் குழுவினர், அவர் வெளியிட்ட 111 ‘உங்கள் குரல்’ இதழ்கள் அனைத்தையும் மின் வடிவாக மாற்றி வெளியிடுகின்றனர்.

இந்த வெளியீட்டு விழா எதிர்வரும் 2015 ஆகஸ்ட் 8ஆம் நாள் கோலாலம்பூர் துன் சம்பந்தனார் மாளிகையின் சோமா அரங்கில் காலை 9.00 மணிக்குச் சிற்றுண்டியோடு தொடங்கி 11.30 மணி வரை நடைபெறும். விழாவில் மின்பதிவுகள் தொடர்பான விளக்கங்களும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகளும் வழங்கப்பெறும்.

தொல்காப்பியக் கடலில் ஒரு துளி

மின்பதிப்பு நூல் வெளியீட்டிற்குப் பிறகு சீனி ஐயாவின், ‘தொல்காப்பியக் கடலில் ஒரு துளி’ என்ற நூல் வெளியீடு காணவுள்ளது.

இந்நூல் வெளியீடு குறித்து ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் பொன் கோகிலம் அவர்கள் பேசுகையில், “‘நான்கு ஆண்டுகள் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட சீனி ஐயாவின் தொல்காப்பியம் பற்றிய உரை ‘தொல்காப்பியக் கடலில் ஒரு துளி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த நூல் வெளியீட்டில் கிடைக்கும் தொகை முழுவதும் சீனி ஐயாவின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.