மாஸ்கோ, ஜூலை 13 – ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் இராணுவ வீரர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் 23 இராணுவ வீரர்கள் பலியானதாகத் தகவல்கள் வந்துள்ளன.
சைபீரியாவில் இன்று காலை அந்நாட்டு இராணுவத்தின் வான்வழி பாதுகாப்புப் படை வீரர்களுக்கான குடியிருப்பு பகுதியின் மேற்கூரை மொத்தமாக சரிந்து விழுந்தது. நான்கு மாடி கட்டிடமான அந்த குடியிருப்பில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்புக் குழு, கட்டிடம் சரிந்த பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டது.
மீட்புப் பணிகளின் போது, இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 23 இராணுவ வீரர்கள் பலியானது தெரிய வந்தது. காயமடைந்தவர்களை மீட்ட பாதுகாப்புக் குழுவினர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். படுகாயமடைந்த சிலர் மாஸ்கோ மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, 2013-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட அந்த கட்டிடம் எப்படி இடிந்து விழுந்தது என்று தெரியவில்லை. இது தொடர்பாக ரஷ்ய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.