கொழும்பு, ஜூலை 13- இலங்கையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சுதந்திரக் கட்சியின் சார்பில்,.சிறிசேனாவின் அனுமதியுடன் முன்னாள் அதிபர் அதிபர் ராஜபக்சே பிரதமராகப் போட்டியிடுகிறார்.
ராஜபட்சேவை வீழ்த்த, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் புதிய கூட்டணி உருவாகியுள்ளது. இக்கூட்டணியில் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, பாரம்பரியக் கட்சி, ஜேஎச்யூ கட்சி ஆகியவை சேர்ந்துள்ளன.
இந்நிலையில், கொழும்புவில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பிரதமர் ரணில் கலந்து கொண்டு பேசியதாவது:- “கடந்த ஜனவரியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபட்ச தோற்கடிக்கப்பட்டதைப் போல, நாடாளுமன்றத் தேர்தலிலும் அவரை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.
ஒன்றுபட்ட இலங்கையில் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ். தமிழர்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வு நிச்சயம் அளிக்கப்படும். இறுதிக் கட்டப் போர் நடந்த பகுதியில் ராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், தேர்தலுக்குப் பின்பு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
பதவியில் இருந்து உங்களால் தூக்கி எறியப்பட்ட ராஜபக்சே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற மீண்டும் மாற்றுப் பாதையில் முயற்சி செய்கிறார்.
ராஜபக்சே மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொது மக்களின் எதிர்காலம் இருண்டகாலமாக மாறிவிடும். இதனால் தான், இந்தத் தேர்தல் நாட்டு மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் என்கிறேன். எனவே, நாட்டு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.