புத்ரா ஜெயா, ஜூலை 13 – இன்று நடைபெற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினருக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கு ஓரிரு மணி நேரங்களிலேயே மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளால் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இன்றைய வழக்கில் தோல்வியடைந்தாலும், அடுத்து கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்ய நாட்டின் சட்ட அமைப்பு வழக்கு தொடுப்பவர்களுக்கு வாய்ப்பளிக்கின்றது.
ஆனால், அப்படி மேல்முறையீடு செய்வதாக இருந்தால், இந்த வழக்கில் முக்கியமான சமுதாயப் பிரச்சனைகளோ, அல்லது நீதிமன்றங்கள் தெளிவாக்க வேண்டிய சட்ட நுணுக்கங்கள் அல்லது சிக்கல்கள் இருப்பதாகவோ மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் திருப்தியான வாதங்களை முன்வைத்து அவர்களின் முன் அனுமதியைப் பெற வேண்டும்.
இப்போதுள்ள கேள்வி இந்த முயற்சியில் பழனிவேல் தரப்பினரின் வழக்கறிஞர்கள் ஈடுபடுவார்களா என்பதுதான்.
சங்கப் பதிவகம் மீதான வழக்கில் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையை பழனிவேல் தரப்பு எதிர் தரப்பினருக்கு செலுத்த வேண்டும் என்ற அதிரடியானத் தீர்ப்பு இன்று வெளியாகியிருப்பதால், இதற்கு மேலும் துணிந்து, தங்களின் மேல் முறையீட்டை கூட்டரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்றைய வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து பழனிவேல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா அல்லது தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அரசியலில் போராடுவாரா என்ற கேள்வியும் மஇகாவில் உள்ள அவரது ஆதரவாளர்களிடையே பரவி வருகின்றது.
அவரது ஆதரவாளர்களில் பலர், குறிப்பாக அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் டாக்டர் சுப்ரா தரப்பிலான – சங்கப் பதிவக அங்கீகாரம் பெற்ற – வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.