Home நாடு பழனிவேலுக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொண்டார் முனியாண்டி!

பழனிவேலுக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொண்டார் முனியாண்டி!

887
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 14 – நேற்று வெளியிடப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டத்தோ என்.முனியாண்டி, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கை இன்று மீட்டுக் கொண்டார்.

“டத்தோஸ்ரீ பழனிவேல் தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை ஏற்று சங்கப்பதிவிலாகாவின் உத்தரவுகளுக்கு கீழ்படிவார், இதற்கு மேல் கட்சியில் எந்த ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தமாட்டார் என நம்புகின்றேன். சங்கப்பதிவிலாகாவின் உத்தரவுகள் மிகவும் தெளிவாக உள்ளன. அதை நீதிமன்றமும் மறு உறுதிப்படுத்தியுள்ளது” என்று டத்தோ என்.முனியாண்டி, தனது மனுவை மீட்டுக் கொண்ட பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Muniandy Ampang-Court-July 14

#TamilSchoolmychoice

(நீதிமன்றத்தில் இன்று முனியாண்டி தனது வழக்கறிஞர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன்)

மேலும், “வேட்புமனுத்தாக்கல் சுமூகமாக நடைபெறுவதற்காகத் தான் இடைக்காலத் தடை அளிக்கப்பட்டது. எனவே, மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று வெளியிட்ட தீர்ப்பின் படி, சங்கப்பதிவிலாகாவின் உத்தரவுகளுக்கு கட்சி உட்பட்டுள்ளது. இதற்கு மேல் இந்த விவகாரத்தில் எந்த ஒரு சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் தேவையிருக்காது என முடிவெடுத்துள்ளேன். எனவே இனி டத்தோஸ்ரீ பழனிவேல் இரண்டு நீதிமன்றத்தின் முடிவுகளையும் மதித்துத் தான் ஆக வேண்டும் என்பதால், அவருக்கு எதிரான இந்த தடைக்கு அவசியமில்லை” என்றும் என்.முனியாண்டி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இந்த வழக்கை தனது சொந்த முடிவின் படி மீட்டுக் கொண்டதாகவும், ஒரு சில தரப்புகள் கூறுவது போல இந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த வழக்கிற்கான செலவுகள் குறித்த விசாரணை எதிர்வரும் ஜூலை 28-ம் தேதி நடக்கும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

என்.முனியாண்டி சார்பில் வழக்கறிஞர்கள் எம்.எஸ் வசந்தி ஆறுமுகம், எட்மண்ட் மில்கியு மற்றும் எம்எஸ் ரீட்டா ரமணி ஆகியோரும், பழனிவேல் சார்பில் டத்தோ மனோகரனும் பிரதிநிதித்தனர்.