கோலாலம்பூர், ஜூலை 14 – லோ யாட் பிளாசாவில் கடந்த சனிக்கிழமை, லெனோவா எஸ்860 வகை திறன்பேசி ஒன்றைத் திருடி, அந்த சம்பவம் மிகப் பெரிய மோதலாக உருவெடுக்கக் காரணமான ஆடவர், இன்று நீதிமன்றத்தில் தனது குற்றத்தை மறுத்ததோடு, விசாரணை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 11) மாலை 4.47 மணியளவில், லோ யாட் பிளாசாவில் சாருல் அன்வார் அப்துல் அஜீஸ் (வயது 22) என்ற அந்த ஆடவர் அக்குற்றத்தைப் புரிந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம், பிரிவு 380-ன் கீழ் மீது அந்த ஆடவர் மீது திருட்டு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 வருட சிறை தண்டனையோ, அபராதமோ, பிரம்படியோ வழங்கப்படலாம்.
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில், நீதிபதி அமினாதுல் மார்டியா முகமட் நூர், 3000 ரிங்கிட் பிணைத்தொகையுடன், ஒருவரின் பொறுப்பில் அந்த ஆடவரை விடுவித்து உத்தரவிட்டார். இவ்வழக்கு வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி விசாரணைக்கு வருகின்றது.