கோலாலம்பூர், ஜூலை 18 – வலைப்பதிவாளர் பாபாகோமோ (படம்) என்கிற வான் முகமட் அஸ்ரியின் போலீஸ் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் நான்கு நாள் தடுப்புக் காவலுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.40 மணியளவில் பாபாகோமோ விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவர் மீதான விசாரணை தொடர்வதாக காவல் துறை அறிவித்துள்ளது.
பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றவியல் சட்டத்தின் 505ஆவது பிரிவின் கீழ் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக அவரது வழக்கறிஞர் அகமட் சோயப் இஸ்மாயில் தெரிவித்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லோ யாட் வணிக வளாகம் அருகே திடீர் கலவரம் மூண்டது. இதையடுத்து ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, அது லோ யாட் சம்பவத்துடன் தொடர்புடையது என பதிவிட்டிருந்தார் பாபாகோமோ.
இதையடுத்து அவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து, நேரில் வர ஒருநாள் அவகாசமும் அளித்தனர். எனினும் பாபாகோமோ விசாரணைக்கு வராததையடுத்து, செவ்வாய்க்கிழமை இரவு அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, பாபாகோமோ ஒரிஜினல் என்ற பெயரிலான முகநூல் பக்கத்தில் இனத் துவேஷத்தை தூண்டும்விதமான கட்டுரைகள் எதையும் தனது கட்சிக்காரர் வெளியிடவில்லை என்றும் வழக்கறிஞர் அகமட் சோயப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கண்ணில்படும் சீனர்களை எல்லாம் மலாய்க்காரர்கள் விரட்டியடிக்க வேண்டும் என அப்பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால் இத்தகைய பதிவுகள் வெளியானபோது, பாபாகோமோ தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட அகமட் சோயப், அவருக்கும் அத்தகைய பதிவுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றார்.