கோலாலம்பூர், ஜூலை 19 – லோ யாட் கலவரச் சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரமே ஆன நிலையில், அதன் அருகில் உள்ள மற்றொரு வணிக வளாகத்தில் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார். இம்முறை குளிர்கண்ணாடிகள் (sun glasses) காணாமல் போனது தொடர்பில் அக்குறிப்பிட்ட நபர் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
வெள்ளிக்கிழமையன்று பெர்ஜாயா டைம்ஸ் ஸ்குவேர் வணிக வளாகத்தில் இயங்கி வரும் ஒரு கண்ணாடிக் கடையில் குளிர்கண்ணாடிகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அக்கடையின் விற்பனை மேலாளர், கடைக்கு வருகை தந்த 5 பேர் கொண்ட குழுவிடம் விசாரித்தபோதே அவர் தாக்கப்பட்டுள்ளார்.
“5 பேரும் கடையின் மேலாளரை காற்பந்தைப் போல் எட்டி உதைத்தனர். அங்கிருந்த காவலாளி உட்பட யாரும் இதைத் தடுக்க முன்வரவில்லை. மேலாளரின் மூக்கிலிருந்து நிறைய ரத்தம் வழிந்தது,” என இச்சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறியதாக ஸ்டார் ஆன்லைன் செய்தி தெரிவிக்கிறது.
இச்சம்பவம் நிகழ்ந்தபோது தனது கணவரின் வருகைக்காக கடையின் அருகே காத்திருந்தார் மேலாளரின் மனைவி. அப்போது இரவு சுமார் 9.30 மணியளவில் 5 பேர் கொண்ட குழு கண்ணாடிக் கடைக்குள் நுழைந்துள்ளது. சிறிது நேரம் பொருட்களை பார்வையிட்ட பின்னர் அக்குழுவினர் கிளம்பியுள்ளனர்.
“அப்போது கடையில் இருந்த ஒரு ஜோடி குளிர்கண்ணாடிகள் காணாமல் போயிருப்பதை எனது கணவரும் விற்பனை உதவியாளரும் கவனித்தனர். எனது கணவர் அக்குழுவினரை நோக்கி வேகமாகச் சென்றபோது கடையில் இருந்த பெண் அவர்களை நோக்கி திருடர்கள் என உரக்க குரல் எழுப்பினார்,” என்று நடந்த சம்பவத்தை மேலாளரின் மனைவி விவரித்ததாக பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில் தங்களை நோக்கி வந்த விற்பனை மேலாளரை சகட்டு மேனிக்கு ஆபாசமாக ஏசிய அக்குழுவினர், அவரை கீழே தள்ளி அடித்து உதைத்துள்ளனர்.
இதையடுத்து 5 நபர்களுக்கும் காவல்துறையினர் வலைவீசி இருப்பதாக ஸ்டார் ஆன்லைன் இணைய செய்தித் தளம் மேலும் தெரிவித்துள்ளது.