Home நாடு பழனிவேலுவின் சட்டப் போராட்டம் கூட்டரசு நீதிமன்றம் வரை செல்கின்றது

பழனிவேலுவின் சட்டப் போராட்டம் கூட்டரசு நீதிமன்றம் வரை செல்கின்றது

738
0
SHARE
Ad

Dato S.Balakrishnanகோலாலம்பூர், ஜூலை 15 – கடந்த ஜூலை 13ஆம் தேதி டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினருக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தாலும், பழனிவேல், தனது சட்டப் போராட்டத்தை கூட்டரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதன் வழி விடாது தொடரப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சார்பாக அவரது அணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் மஇகா தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் (படம்) அறிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்திலும், மேல் முறையீட்டு நீதிமன்றத்திலும் தொடர்ந்து தோல்வி கண்டு வருவதன் மூலம் இந்த வழக்கின் பலவீனத்தன்மை தெளிவாகத் தெரிந்தபோதிலும் கூட்டரசு மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு (Federal Court) பழனிவேல் தரப்பினர் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

திங்கட்கிழமை நடைபெற்ற வழக்கின் முடிவைத் தொடர்ந்து பழனிவேலுவின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் அம்பாங் ஜெயா கிளைத் தலைவர் டத்தோ என்.முனியாண்டி பழனிவேல் தேசியத் தலைவராக செயல்பட முடியாது எனத் தொடுத்திருந்த வழக்கை நேற்று மீட்டுக் கொண்டுள்ளார்.

மஇகா அமைப்பு விதிகள் பிரிவு 91இன்படி பழனிவேலுவுடன் சேர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நால்வரும் இனி உறுப்பினர்களாகச் செயல்பட முடியாது என 2009 மஇகா மத்திய செயலவையும், சங்கப் பதிவகமும் செய்துள்ள முடிவை எதிர்த்தும் பழனிவேல் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகவும், இந்த வழக்கும் கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்குகளில் வெல்ல முடியுமா?

இதற்கிடையில் ஆகஸ்ட் மாதத்தில் மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கூட்டரசு நீதிமன்றத்தில் பழனிவேலு தரப்பினரின் மேல் முறையீடு விசாரணைக்கு வருவதற்கு முன்னரே மஇகாவுக்கான தேசியத் தலைவர் தேர்தல் நடந்து முடிந்து விடும்.

பழனிவேல் கூட்டரசு நீதிமன்றத்தில் அப்படியே தனது மேல் முறையீட்டில் வெற்றி பெற்றாலும், மூன்று காரணங்களால் அவர் மீண்டும் தேசியத் தலைவராக கட்சிக்கு திரும்ப முடியாது என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதல் காரணம், கூட்டரசு நீதிமன்றத்தில் அப்படியே வெற்றி பெற்றாலும் அதற்குள் புதிய தேசியத் தலைவர் – அநேகமாக டாக்டர் சுப்ரா – தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார்.

இரண்டாவது, காரணம், அப்படியே கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டில் வெற்றி பெற்றாலும், பழனிவேல் தற்போது மஇகாவின் உறுப்பினர் இல்லை என்ற முடிவை மாற்றியும் ஓர் உத்தரவை சங்கப் பதிவகத்திடம் இருந்தோ, நீதிமன்றத்திடம் இருந்தோ பெறவேண்டும்.

மூன்றாவது காரணம், அப்படியே கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டில் பழனிவேல் வெற்றி பெற்றாலும், அதற்குள் புதிய தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அந்த தேசியத் தலைவர் தேர்தல் செல்லாது என்ற ஒரு நீதிமன்ற உத்தரவையும் பழனிவேல் பெற்றாக வேண்டும்.

அல்லது, இப்போதே தேசியத் தலைவர் தேர்தலுக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப்  பெற்றாக வேண்டும்.

இத்தனை சட்டத் தடைகளையும் தாண்டி பழனிவேலுவால் கட்சிக்குள் மீண்டும் வர முடியுமா – இந்த நீதிமன்ற வழக்குகளின் தொடர் போராட்டத்தில் அவர் வெல்ல முடியுமா – என்பதற்கு காலம்தான் விடைகூற வேண்டும்!

-இரா.முத்தரசன்