Home இந்தியா பாஜக எச்.ராசா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதன் பின்னணி!

பாஜக எச்.ராசா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதன் பின்னணி!

865
0
SHARE
Ad

rajaகாரைக்குடி, ஜூலை 15- பா.ஜ.க.தேசியச் செயலாளர் எச். ராஜா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எச்.ராஜாவுக்கு ஏற்கனவே பல அச்சுறுத்தல்கள் இருந்தன. ஒன்றரை ஆண்டுக்கு முன், கண்டனூரில் உள்ள எச்.ராஜாவின் தோட்டத்திற்கு, அரிவாளுடன் வந்த நபர்கள், மிரட்டல் விடுத்துச் சென்றனர். தற்போது, காரைக்குடியைச் சேர்ந்த ஒரு அமைப்பினர், ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.ஆறு மாதங்களுக்கு முன், ‘நீ உயிருடன் இருக்க முடியாது’ என்ற கடிதம், ராஜாவின் வீட்டில் வீசப்பட்டது. தொடர் மிரட்டல் குறித்து ராஜா காவல்துறையில் புகார் கொடுத்திருந்தார். அதனால், காரைக்குடியில் உள்ளஅவரது வீட்டிற்கு, 24 மணிநேரமும் காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு10:30 மணியளவில் இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், வீட்டின் முன்புற இரும்புக்கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார்கள்.

#TamilSchoolmychoice

எனினும், பெருத்த சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம்,காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனிப்படை அமைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டை வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

காவல்துறை மோப்ப நாய்கள் அழகப்பா பல்கலைக்கழகப் பி.எட்.கல்லூரிக்குப் பின்புறம் உள்ள வைரவ புரம் பகுதி வரை ஓடி நின்றுவிட்டன.

எச்.ராஜா சில கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு எதிராகப் பேசி வந்தார். எனவே, குண்டு வீச்சில் அவர்களுக்குத் தொடர்புள்ளதா எனச் சந்தேகம் உள்ளது.

எச்.ராஜாவின் வீடு இருக்கும் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகத் தெரு விளக்குகள் எரியவில்லை. பெட்ரோல் குண்டு வீசுவதற்காகத்தான் மர்மநபர்களால் தெருவிளக்குகள் அணைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக எச்.ராஜா கூறியிருப்பதாவது: சென்னை மகாகவி பாரதியார் நகரில், நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றேன். அப்போது, ஆம்பூர் கலவரம் குறித்தும், பின்னணியில் இருந்து செயல்பட்ட அமைப்புகள் பற்றியும், விளக்கமாகப் பேசினேன். நான் பேசி முடித்ததும், காரைக்குடியில் உள்ள என் வீட்டில், பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

நல்லவேளை, நான் சென்னையில் இருந்து விட்டேன். இல்லையென்றால், அவர்கள் எதிர்பார்த்து வந்த விபரீதம் நடந்திருக்கும். இப்படிக் கொலை வெறியோடு, என்னை மையமாக வைத்துத் தாக்க முயற்சிப்பது,இது முதன்முறையல்ல; நான்காவது முறை.

கடந்த 2007ல், கல்வீசித் தாக்கினர்; அப்போது, நான் வீட்டில் இருந்தேன்; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். இருந்தாலும், அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடித்து,காவல்துறையில் ஒப்படைத்தேன்.
வேலூரில், பா.ஜ., மருத்துவ ரணி செயலர், டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதை கண்டித்து, 2012 அக்., 26ம் தேதி, இளையான்குடி பொதுக்கூட்டத்தில் பேசினேன். அப்போது, ராமநாதபுரம் பெரியபட்டினத்தில், 36 பேருக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுவதாக, ஆதாரத்துடன் குற்றம் சாட்டினேன்; அதன் மீது நடவடிக்கை எடுத்து,காவல்துறையினரும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்தனர்.

ஒரு குறிப்பிட்ட இயக்கம், இதன் பின்னணியில் இருந்து செயல்படுவதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியதால், அவர்கள் கோபமுற்று, எங்கள் தொண்டர்கள் மீது, கொடூரத் தாக்குதல் நடத்தினர்.

கடந்த 2013 ஏப்ரல்9-ஆம் தேதி, கண்டனூரில், பண்ணை வீட்டில் நான் இருப்பதாக நினைத்து, என்னைக் கொலை செய்யும் நோக்கத்துடன், பயங்கர ஆயுதங்களுடன் சிலர் புகுந்தனர்; இரவு நேரத்தில், நான் அங்கு தங்குவேன் என்பதை அறிந்து வந்துள்ளனர். ஆனால், அன்றைய தினம், நான் குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று விட்டதால், உயிர் தப்பினேன்.

அதே பாணியில் தான், இப்போதும் என் வீட்டுக்கு வந்து, பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இந்த நிகழ்வுக்குப் பின்னணியிலும், குறிப்பிட்ட அந்த இயக்கமே உள்ளது.வழக்கம் போல,காவல்துறையிடம் எல்லா விவரங்களையும் சொல்லி விட்டேன். இனி அவர்கள் தான், நியாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.