சென்னை, ஜூலை 16- மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் தான் கலந்து கொள்ள முடியாததற்கு விளக்கம் அளித்து பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், “முக்கிய அலுவல்கள் காரணமாகத் தான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எனக்குப் பதில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்தை அனுப்புவதாக இருந்தேன்; ஆனால் இந்தக் கூட்டத்தில் முதல்வர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என நேற்று மாலை தெரிய வந்ததால் அவரையும் அனுப்ப இயலவில்லை” எனத் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், “நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் சில பிரிவுகள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளன. எனவே அத்தகைய சட்டப்பிரிவுகளுடன் இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது.நிலம் தொடர்பாகச் சட்டம் இயற்றுவத்தை மாநில அரசுகளிடமே விட்டுவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு மசோதாவில் வெளிப்படையான, நியாயமான இழப்பீட்டு உரிமையை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகம் செய்தது முதல், தமிழக அரசு கொள்கை ரீதியான உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. வேளாண்மை மற்றும் விவசாயிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், கூட்டாட்சி அமைப்பிற்குள் மாநில தன்னாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசின் நிலைப்பாடு அமைந்துள்ளது.
1894-ஆம் வருடக் காலனி ஆட்சிக்கால நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்ட 2011-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு மசோதா, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் சட்டப்படியான உரிமையை மீறுவதாகவும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்துள்ளது. இது துரதிர்ஷ்டவசமான, விரும்பத்தகாதது ஆகும்.
ஏழாவது அட்டவணையில் உள்ள இரண்டாவது பட்டியலில் 18-ஆவது பதிவின் கீழ் நிலங்கள், மாநில அரசுக்கு உட்பட்டவை. மாநிலங்கள் மக்களோடு நெருக்கமாக இருப்பதால், நிலம் தொடர்பான விசயங்களைக் கையாளுவதில் மாநில அரசுகளுக்கு, அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் அதிகாரம் அளித்தனர்.
நிர்வாக ரீதியிலும் அனைத்து ஆவணங்கள் மற்றும் அவை தொடர்பான விவகாரங்களை மாநில அரசுகளே கையாளுகின்றன. எனவே, நிலம் தொடர்பாகச் சட்டம் இயற்றுவதை மாநில அரசுகளுக்கே விட்டுவிடுவது சரியானதாக இருக்கும்.
விவசாயிகளின் நலன்களை மேம்படுத்தும் நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. நிலங்கள் தொடர்பாக மாநில அரசுகள் மட்டுமே சட்டம் இயற்ற வேண்டும் என மசோதா மீதான விவாதத்தில் பாரபட்சமற்ற ஆக்கப்பூர்வமான கருத்தைத் தெரிவித்துள்ளோம்.
முதலாவது மசோதாவில் உத்தேசித்துள்ள படி தனியார் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக நிலங்களைக் கையகப்படுத்தும்போது, நிலங்களின் உரிமையாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில், தொடக்கத்திலேயே நாங்கள் உறுதியாக இருந்தோம்” எனத் தன் கடுமையான எதிர்ப்பைக் காட்டியுள்ளார்.