புதுடெல்லி, ஜூலை 16- இந்தியாவில் அடிக்கடி பெட்ரோல் விலையும், டீசல் விலையும் அதிகரிப்பது தான் வழக்கம். ஆனால், அதிசயமாக இம்முறை பெட்ரோல் விலையும், டீசல் விலையும் குறைவு என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 55 காசும், டீசல் விலை 2 ரூபாய் 44 காசும் குறைந்துள்ளது. இவ்விலைக் குறைப்பு நேற்று நள்ளிரவு முதம் அமலுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதனால், அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உள்ளிட்ட விசயங்கள் அடிப்படையில், 15 நாட்களுக்கு ஒரு தடவை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
கடந்த 1–ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு குறைக்கப்பட்ட நிலையில், நேற்று அவற்றின் விலை சற்று அதிகமாகக் குறைக்கப்பட்டது. உள்ளூர் வரிகளைச் சேர்க்காமல், லிட்டருக்குத் தலா 2 ரூபாய் விலை குறைக்கப்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.