புதுடெல்லி, ஜூலை 17 – சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு முறைகேடாக தொலைபேசி இணைப்புகளை கொடுத்த வழக்கில் தயாநிதிமாறனுக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யமாறு உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ மனுத்தாக்கல் செய்துள்ளது.
தயாநிதி மாறன், மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான 323 தொலைபேசி இணைப்புகளை சன் தொலைகாட்சி நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச்செயலாளர் கவுதமன், சன் தொலைக்காட்சியின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் கண்ணன் மற்றும் மின்னியலாளர் ரவி ஆகியோர் ஏற்கனவே கைதான நிலையில், ஜூலை 1-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு, தயாநிதி மாறனுக்கு சிபிஐ உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பிணையை பெற்றார்.
அதன் பிறகு தயாநிதிமாறனிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை முடிவிற்கு வந்தது. அவரிடம் மேலும் சில ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யமாறு உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ மனுத்தாக்கல் செய்துள்ளது.
குறிப்பிட்ட அந்த மனுவில், ”தயாநிதிமாறன், டெல்லியில் நடந்த விசாரணையின்போது சரியான அளவில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே, அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டி உள்ளது. அதனால் அவருக்கு வழங்கி உள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.