கோலாலம்பூர், ஜூலை 17 – 298 பேர் பலியாவதற்கு காரணமான எம்எச் 17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யப் போராளிகள் மட்டுமல்ல மாஸ் நிறுவனத்தின் கவனக்குறைவும் ஒரு கரணம் என்று டச்சு ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக சிஎன்என் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “டச்சு பாதுகாப்பு ஆணைய விசாரணை அதிகாரிகளின் இறுதி அறிக்கை படி, ரஷ்ய ஆதரவு போராளிகள் விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைக் கொண்டு தான் எம்எச்17-ஐ வீழ்த்தி உள்ளனர் என்பது தெளிவாகிறது. அவர்கள், அந்த தாக்குதலை ரஷ்ய எல்லையில் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இருந்து தான் நடத்தி உள்ளனர். அதேபோல் இந்த தாக்குதலுக்கு மாஸ் நிறுவனமும் ஒரு காரணமாகி விட்டது.”
“யுத்த களங்கள் (Conflict Zone) பற்றி ஏற்கனவே மாஸ் நிறுவனத்திற்கு குறிப்புகள் அனுப்பப்பட்டு இருந்தது. அதனை மீறி எம்எச்17 விமானி, விமானத்தை ஆபத்துகள் நிறைந்த குறிப்பிட்ட அந்த பாதையில் இயக்கி உள்ளார். அமெரிக்க ஏர்லைன்ஸ், பிரிட்டன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் எல்லாம் விமானப்படை வீரர்கள் முன்னெச்சரிக்கையாக தெரிவிக்கும் குறிப்புகளின் படி தான், யுத்த களங்கள் பற்றி தெரிந்து கொள்கின்றனர். அதன் படிதான் விமானங்களையும் செலுத்துகின்றனர். ஆனால், மாஸில் அத்தகைய வலுசேர்க்கும் அமைப்புகள் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டச்சு பாதுகாப்பு ஆணையம் தனது விசாரணையின் ஒரு பகுதியாக, விமான தாக்குதல் தொடர்பான சந்தேகங்களை அறிந்து கொள்ள போயிங் போன்ற நிறுவனங்களை அணுகி உள்ளது. அதன் மூலம் தான் மேற்கூறிய தகவல்கள் கசிந்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே டச்சு ஆணையம், எம்எச் 17 தொடர்பான தனது வரைவு ஆவணங்களை ஜூன் 1-ம் தேதியே மலேசியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சமர்பித்துள்ள நிலையில், அந்த ஆவணங்களின் இறுதி வடிவம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.