Home இந்தியா “சென்னை சூப்பர்கிங்சிற்கு விதிக்கப்பட்ட தடை தமிழர்களுக்கு எதிரானது” – சுப்ரமணியசாமி

“சென்னை சூப்பர்கிங்சிற்கு விதிக்கப்பட்ட தடை தமிழர்களுக்கு எதிரானது” – சுப்ரமணியசாமி

663
0
SHARE
Ad

chennai-super-kingsபுது டெல்லி, ஜூலை 16 – “சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு தடை விதித்து இருப்பது தமிழர்களின் பெருமைக்கு எதிரான ஒன்று” என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“சூதாட்டத்தில் ஈடுபட்ட தனிநபர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இது தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதாவின், விசாரணைக் குழு அறிக்கை ஏற்கக்கூடிய ஒன்று தான். எனினும், சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதித்து இருப்பது, தமிழர்களின் பெருமைக்கு எதிரான ஒன்று. என்னைப் பொருத்தவரை இது மிகவும் கடுமையான தண்டனையாகத் தோன்றுகிறது.”

#TamilSchoolmychoice

“மும்பை மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் இயங்கிவந்த துபாய் சூதாட்டக் கும்பல், கிரிக்கெட் போட்டிகளில் தலையிடாமல் இருக்க நடவடிக்கை எடுத்த சீனிவாசன் மீது தமிழர்கள் அனைவரும் பெரும் மதிப்பு கொண்டிருக்கிறார்கள். எனவே, தமிழர்களின் எதிர்பார்ப்பிற்காகவும், பொதுநலம் சார்ந்தும் நீதிபதி லோதா, சென்னை சூப்பர்கிங்ஸிற்கு விதித்துள்ள 2 ஆண்டுகள் தடையை மறுபரிசீலனை செய்யவேண்டும். இது தொடர்பாக, விரைவில் நான் மனுத்தாக்கல் செய்வேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து இணைய தளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தோனி இல்லாத ஐபிஎல் போட்டியை எப்படி பார்ப்பது? என முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும், இது தொடர்பாக பொது நோக்கர்கள் கூறுகையில், “ஒரு தொழிற்சாலை சட்டத்துக்கு புறம்பாக இயங்குவது தெரிந்தால், சட்டம் அந்த தொழிற்சாலையை மூடுகிறது. அதில் பணி செய்யும் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்களே என்று யோசிப்பதில்லை. அதுபோலத் தான், சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்ட தடையையும் பொதுநோக்கத்துடன் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.