பெர்லின், ஜூலை 17 – ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தின் எதிரொலியாக காக்பிட்டில் நடைபெறும் செயல்முறைகளை கண்காணிக்க, இரு பாதுகாவலர்களை நியமிக்க, ஐரோப்பிய விமான போக்குவரத்து கண்காணிப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஐரோப்பிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானிகள் தங்கள் பயிற்சியின் போதும், பணியில் ஈடுபடுவதற்கு முன்பும் உளவியல் சார்ந்த சோதனைகளுக்கு உடன்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், போதை மருந்து மற்றும் மது சோதனைகளும் நடத்தப்படும்.”
“மேலும், காக்பிட்டில் இரு கண்காணிப்பாளர்கள், அங்கு நடைபெறும் செயல்பாடுகளை கண்காணிக்க நிறுத்தப்படுவர். அவர்கள் இருவரில் ஒருவராவது, விமானத்தை இயக்கும் பயிற்சி பெற்றவராக இருப்பார். இதன் மூலம், ஜெர்மன்விங்ஸ் போன்ற துயரச் சம்பவம் மீண்டும் நிகழாமல் தற்காத்துக் கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் 150 பயணிகளுடன் சென்ற ஜெர்மன்விங்ஸ் விமானம், விபத்திற்குள்ளானதில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர். அதன் பின்னர் நடைபெற்ற விசாரணையில், துணை விமானி ஆண்ட்ரியஸ் லூபிட்ஸ் (படம்) தான் விமானத்தை வேண்டுமென்றே தாழ்வாகப் பறக்கச் செய்து விபத்திற்குள்ளாக்கினார் என்பது தெரியவந்தது.