கோலாலம்பூர், ஜூலை 18 – 600 மில்லியன் ரிங்கிட் தொடர்பான ஊழலில் தாம் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த விசாரணையை வரவேற்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனைக் குழு தலைவர் துங்கு அப்துல் அசிஸ் தன் மீது சுமத்தியுள்ள இக்குற்றச்சாட்டு தொடர்பில் அதிகாரிகள் எந்த நேரத்திலும் தம்மை விசாரிக்கலாம் என மகாதீர் கூறியுள்ளார்.
“களவாடியதாகக் கூறப்படும் அத்தொகை எனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதா, அல்லது லண்டன் பங்குச் சந்தை விதிகளின் காரணமாக அத்தொகையை இழக்க நேரிட்டதா என்பதை முடிவு செய்யட்டும். அத்தொகை எனது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆதாரம் இருக்குமேயானால், தயவு செய்து என் மீது குற்றம் சுமத்தி, கைதும் செய்யுங்கள். இன்னும் காலம் கடந்துவிடவில்லை,” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
பல விவகாரங்கள் தொடர்பில் பிரதமர் நஜிப் தான் தெரிவித்த ஆலோசனைகளை ஏற்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு இருந்தும் கூட கடந்த 13ஆவது பொதுத்தேர்தலில் நஜிப்புக்கு ஆதரவாக தாம் பரப்புரை செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
“1எம்டிபி விவகாரம் வெளிப்படும் வரை, அவர் (நஜிப்) பதவி விலக வேண்டும் என நான் கேட்கவில்லை. அவர் மீது நான் சுமத்திய குற்றச்சாட்டுகள் எதற்கும் அவர் பதிலளிக்கவில்லை,” என்று மகாதீர் கூறியுள்ளார்.