சென்னை, ஜூலை 18 – திமுக தலைவர் கருணாநிதியின் மகளும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு, நேற்று பிரபல மருத்துவமனை ஒன்றில் தைராய்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த சில வருடங்களாகவே கனிமொழி, தைராய்டு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக அவர் வியாழக்கிழமை இரவே அங்கு அனுமதிக்கப்பட்டார்.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில், கனிமொழியின் கழுத்தில் இருந்த தைராய்டு கட்டி அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை முடியும் வரை, திமுக பொருளாளரும், கனிமொழியின் சகோதரருமான மு.க.ஸ்டாலின் அவருடன் இருந்தார். நேற்று மாலையில், கருணாநிதி நேரில் சென்று கனிமொழியிடம் நலம் விசாரித்துள்ளார்.
கனிமொழி இன்னும் 3 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்திதாகக் கூறப்படுகிறது.