Home கலை உலகம் திரைவிமர்சனம்: “மாரி” – ஏமாற்றி விட்டார்!

திரைவிமர்சனம்: “மாரி” – ஏமாற்றி விட்டார்!

1001
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 17 – ‘வேலையில்லாப் பட்டதாரி’, ‘அநேகன்’ என வரிசையாக வெற்றிப் படங்களை தந்து வந்த தனுஷின் அடுத்த படம் என்பதால், எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘மாரி’ புஸ்வாணமாகிவிட்டது.

Maari-Danush-Posterதனுஷ், காஜல் அகர்வால் ஜோடி – ஜேசுதாசின் மகனும் பின்னணிப் பாடகருமான விஜய் ஜேசுதாஸ் முதன் முறையாக நடிப்பது –  “காதலில் சொதப்புவது எப்படி” படத்தில் இரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் பாலாஜி சக்திமோகன் படம் – இப்படியாக பல எதிர்பார்ப்புகள் இருந்தும் வழக்கமான கதாபாத்திரங்கள், பல படங்களில் ஏற்கனவே பார்த்துப் பார்த்துச் சலித்த காட்சிகள் – சுவாரசியமில்லாத, திருப்பங்கள் இல்லாத திரைக்கதை என பல ஓட்டைகள் படத்தில்!

கதை – திரைக்கதை

#TamilSchoolmychoice

ஊரில் பெரிய தாதாவுக்கு கையாளாக ஒரு வட்டாரத்தையே கைக்குள் வைத்துக் கொண்டு ராஜாங்கம் நடத்தும் ரவுடி தனுஷ். கொஞ்சம் விளையாட்டுத் தனமான ரவுடி. அந்த வட்டாரத்தில் புறாக்களை வைத்துப் போட்டி நடத்துவதிலும் தனுஷ் கில்லாடி.

maari-Danush-Vijay Yesudassவழக்கம்போல் புதிதாக அந்த வட்டாரத்திற்கு புதிய இன்ஸ்பெக்டராக வரும் அர்ஜூன் (விஜய் ஜேசுதாஸ்) தனுஷின் கொட்டத்தை அடக்கி, அவர்மீது இருந்த ஒரு பழைய கொலைக்கேசை தூசி தட்டி எடுத்து, அவரை சிறைக்கு அனுப்புகின்றார்.

அனைவரும் அவரை நல்லவன் என நினைத்துக் கொண்டிருக்க, தனுஷ் சிறைக்குப் போனதும், பின்னர் இன்னொரு ரவுடியுடன் சேர்ந்து கொண்டு அந்த ஊரில் அட்டூழியம் பண்ணுகிறார் விஜய் ஜேசுதாஸ். தனுஷின் தலைவன் தாதாவையும் கைது செய்து சிறைக்குள் தள்ளுகின்றார்.

சிறையிலிருந்து வெளியே வரும் தனுஷ் விஜய் ஜேசுதாசின் கொட்டத்தை அடக்கி, மீண்டும் ஊரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான் மீதிக் கதை.

கதையின் வித்தியாசங்கள் 

தமிழ்ப் படங்களில், இதுவரை இல்லாத அளவுக்கு, முதல் முறையாக புறாப்போட்டியை பற்றி விலாவாரியாக விளக்கிப் படத்தை எடுத்திருக்கின்றார்கள். இன்னொரு புதுமையாக, அண்மையில் தமிழ் நாட்டின் மிக சூடான தலைப்புச் செய்தியாக மாறிய செம்மரக் கடத்தலை இணைத்திருக்கின்றார்கள்.

maari -dhanush-kajal -இவை இரண்டும் தவிர மற்றவை எல்லாம் அதே பழைய – பல படங்களில் பார்த்த சம்பவங்கள்தான். தலைவன் தாதாவுக்கு அடங்கியிருக்கும் குறுநில வட்டார ரவுடிகள் – புதிதாக வரும் போலீஸ் பழைய கொலைக் கேசை கையில் எடுப்பது – அந்த வட்டாரத்திற்கு வரும் புதிதாக குடிவரும் குடும்பத்தில் வளையவரும் அழகுக் கதாநாயகி – அவர் மீது முதலில் முரண்டு பிடித்து வம்பு வளர்த்துவிட்டுப் பின்னர் காதல் கொள்ளும்  கதாநாயக ரவடி – ரவுடிகளுக்குள் மோதல்- போலீஸ், ரவுடிகள் இடையிலான மோதல்கள் – இப்படியே இதனையே எத்தனை படங்களில் எடுத்துக் கொண்டு இருப்பார்களோ தெரியவில்லை.

வித்தியாச படங்களைத் தந்து வந்த தனுஷூம் இந்த சுழல் வட்டத்தில் சிக்கிக் கொண்டதுதான் சோகம்!

புறாப் போட்டியை விரிவாகக் காட்டினாலும், அதில் சுவாரசியம் ஏதுமில்லை. ‘ஆடுகளம்’ படத்தில் சேவல் போட்டிகளை வைத்து மதுரைப் பின்னணியில் வலுவாகப் பின்னப்பட்டது போன்ற திரைக்கதை அனுபவம் இந்தப் படத்தில் கொஞ்சமும் இல்லை.

தனுஷ் – காஜல் – விஜய் ஜேசுதாஸ் நடிப்பு

தனுஷூக்கு நடிப்பில் அதிகம் வேலையில்லை. ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே மாதிரி தோற்றத்தில் வருகின்றார். நகைச்சுவைப் பகுதிகள் அதிகமில்லை. ஒருசில காட்சிகள் அதுபோல் அமைக்கப்பட்டிருந்தாலும் நமக்கு சிரிப்பு வரவில்லை.

 Maari Tamil Movie Postersஒருசில காட்சிகளில் மட்டும் “செஞ்சுருவேன்” என்ற வசனத்தை குரலை ஏற்றி இறக்கிப் பேசிக் கவர்கின்றார் தனுஷ். இனி கொஞ்ச நாளைக்கு பல ரசிகர்களின் தேசிய சுலோகமாக ‘செஞ்சுருவேன்’ மாறக்கூடும்!

மற்றபடி படம் முழுக்க சிகரெட்டும் கையுமாகத்தான் தனுஷ் வலம் வருகின்றார். ஒருசில முகபாவனைகளைக் காட்ட வேண்டிய இடத்திலும் சிகரெட் புகையை ஊதியபடியே ‘ஸ்லோ மோஷனில்’ காட்டுவது கொஞ்சம் ஓவராகத்தான் படுகின்றது. அண்மையக் காலங்களில் இத்தனை சிகரெட் புகை எந்தப் படத்திலும் ஊதப்பட்டதில்லை.

தமிழ்ப் படங்களின் முத்திரை குத்தப்பட்ட காட்சியாகவே மாறிவிட்ட டாஸ்மாக் கடைக் காட்சிகளும் படத்தில் உண்டு.

தனுஷின் கையாளாக வரும் ரோபோ சங்கரும் படம் முழுக்க வந்து கலகலப்பூட்டுகின்றார்.

காஜல் அகர்வாலுக்கும் அதிகம் வேலையில்லை. இந்திய அழகிப் போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு அம்சமாக இருக்கும் காஜல் அகர்வால், தனுஷ் வாழும் அதுபோன்ற மோசமான இடத்திற்கு குடிவருவதும், அங்கேயே அதிநவீன ஆடை வடிவமைப்புக் கடை வைப்பதும் நம்பும் படியாக இல்லை.

விஜய் ஜேசுதாஸ் போலீசுக்குள்ள கச்சிதமான உடலமைப்பை வைத்திருக்கின்றார். அது ஒன்றுதான் பொருத்தம். மற்றபடி அந்த அமைதியான, பாவமான முகத்தில் வில்லத்தனத்தையும், குரூரத்தையும் கொண்டுவர ரொம்பவும் கஷ்டப்படுகின்றார். வில்லத்தனமாக நடந்து கொள்வதும், சண்டைக் காட்சிகளில் அடிவாங்குவதுமாக, “இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?” எனக் கேட்கும்படி வைத்து விடுகின்றார்.

அனிருத் இசை மட்டும் படத்திற்கு பலம். பாடல்கள் இரசிக்க வைக்கின்றன. ஒரு பாடலில் தனுஷூடன் வந்து ஆட்டம் போட்டும் நம்மைக் கவர்கின்றார் அனிருத். அடுத்த கதாநாயகனாக உருவெடுக்க முன்னோட்டம் பார்க்கின்றார் போலும்!

மொத்தத்தில், படம் முடிந்து வெளியே வரும் இரசிகர்கள், “கேப்மாரி”- ‘மொள்ளமாரி’- ‘சோமாரி’ – என்று திட்டிக்கொண்டே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

-இரா.முத்தரசன்