Home நாடு அன்வார்-சைபுல் விவகாரம்: காட்சிகள் மாறின- தனது குற்றச்சாட்டில் சைபுல் உறுதி!

அன்வார்-சைபுல் விவகாரம்: காட்சிகள் மாறின- தனது குற்றச்சாட்டில் சைபுல் உறுதி!

883
0
SHARE
Ad

Saiful-Bukhari-2-Sliderகோலாலம்பூர், மார்ச் 8 – பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், தொடர்ந்து கொண்டிருக்கும் சபா துப்பாக்கி சண்டை விவகாரம் ஒரு புறம் நீண்டு கொண்டிருக்க, மற்றொரு அரசியல் காட்சி இன்னொரு புறத்தில் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றது.

இன்று, பிகேஆர் கட்சியின் சுங்கை பட்டாணி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோஹாரி அப்துல் முன்னிலையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது மகன் சைபுல் புகாரி (படம்), எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் மீது சுமத்திய ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டு உண்மையில்லை என்றும், தன் மகனை ஒரு சிலர் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்திக் கொண்டனர் என்றும் சைபுலின் தந்தை அஸ்லான் முகமட் லாசிம் கூறியிருந்தார்.

அதற்காக பல்வேறு சோதனைகளுக்கு உள்ளான அன்வாரிடத்திலும் அவரது குடும்பத்தாரிடத்திலும் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சைபுலின் தந்தை மனம் திறந்து கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

ஆனால் அவ்வாறு அவர் கூறிய சில மணி நேரத்திற்குள்ளாக, அன்வார் மீது ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டை சுமத்தியிருந்த சைபுல் புகாரி பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றைக் கூட்டி, தனது தந்தை கூறியதில் தனக்கு உடன்பாடில்லை என்றும், தான் கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மையென்றும்,  தன் வாழ்நாளில் தனது குற்றச்சாட்டுக்களை மீட்டுக் கொள்ளப் போவதில்லை என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அவ்வாறு அவர் கூறிய போது அவருடன் அவரது வழக்கறிஞர் சாம்ரி இட்ருஸ் உடனிருந்தார்.

அன்வார் தனது அரசியல் சுயலாபத்திற்காக தனது தந்தையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் சைபுல் குற்றஞ்சாட்டினார்.

சபா விவகாரத்தின் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக எதிர்க்கட்சிகள் ஆடும் அரசியல் நாடகம் இது என்றும் சைபுல் தெரிவித்திருக்கின்றார். ஆண்டவன் மீது தனக்கு நம்பிக்கை இருக்கின்றது என்றும் உண்மையை எப்போதும் ஒளித்து வைக்க முடியாது என்றும் சைபுல் உறுதியுடன் கூறியுள்ளார்.

தனது தந்தையின் செயல்பாடு குறித்து தான் அதிர்ச்சி அடைந்தாலும், அவர்மீது தனக்கு இன்னும் மரியாதை உண்டும் அதற்காக அவர் மீது தான் வருத்தம் கொள்ளவில்லை என்றும் சைபுல் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில் அன்வார் மீது சைபுல் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்னும் முடியவில்லை என்றும் அந்த வழக்கை மேல் முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை 22, 23   ஆம் தேதிகளில் விசாரிக்கும் என்றும் சைபுலின் வழக்கறிஞர் சாம்ரி இட்ருஸ் கூறியுள்ளார்.

சைபுலின் தந்தை ஏன் ஒரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு கூறியிருக்கின்றார் என்றும் வழக்கறிஞர் சாம்ரி இட்ருஸ் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

எனவே இது அரசியல் நோக்கம் கொண்டது என்றும் சாம்ரி குற்றம் சாட்டினார்.