கோலாலம்பூர் – சிறையில் இருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை விடுதலை செய்வதற்கு துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து அன்வாரின் முன்னாள் உதவியாளர் சைஃபுல் புகாரி அஸ்லான் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து இன்று வியாழக்கிழமை தனது ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்திருக்கும் சைஃபுல், “அன்வாரின் குற்றச் செயலில் பாதிக்கப்பட்ட உண்மையான நபர் நான் என முன்னாள் பிரதமருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் சட்டத்தால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒரு கிரிமினல் வழக்கை வேண்டுமென்றே மகாதீர் அரசியலாக்குவது வருத்தம் அளிக்கிறது. எனவே நீதிமன்றத்தின் முடிவிற்கு மதிப்பளிக்கும்படி மகாதீரை நான் வலியுறுத்துகிறேன். ஒரு முன்னாள் பிரதமர் என்ற முறையில் துன் மகாதீருக்கு நன்றாகவே தெரியும்” என்று சைஃபுல் தெரிவித்திருக்கிறார்.
நேற்று புதன்கிழமை, அமெரிக்க மனித உரிமை வழக்கறிஞர் கிம்பெர்லே மோட்லியுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த மகாதீர், அன்வாரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.