சென்னை, ஜூலை 21 – எதிர்வரும் 2016-ம் ஆண்டு தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினால் சமுதாய நலனிற்காகவும், மக்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டும் மதுவிலக்கை அமல்படுத்துவதில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டில் தற்போது மதுவிலக்கு இல்லை. இது விவசாயப் பெருங்குடி மக்களையும், தொழிலாளத் தோழர்களையும், ஏன் மாணவர்களையும் கூட தொடர்ந்து மனம் போன போக்கில் மதுவை அருந்த வழிவகை செய்கிறது. இதனால் நூற்றுக்கணக்கில் உயிர்ப்பலி ஏற்படுகிறது.”
“இந்த கொடுமைக்கும், கொடூரப் பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமன்றி தாய்மார்களும், பச்சிளம் குழந்தைகளும் பலியாவதாக வரும் செய்திகள் வேதனை அளிக்கின்றன. மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் என்ன? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எனவே, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய நலனிற்காகவும், மக்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டும் மதுவிலக்கை அமல்படுத்துவதில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
கருணாநிதியின் இந்த அறிவிப்பு பற்றி அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “பூரண மதுவிலக்கு பற்றி திமுக தலைவரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எனினும், அவரின் இந்த அறிவிப்பு தேர்தல் வாக்குறுதியாக மட்டும் இருந்துவிடக் கூடாது. அவர் பூரண மதுவிலக்கை கட்டாயமாக்குவோம் என்று உறுதியாகக் கூறவில்லை. மதுவிலக்கை அமல்படுத்துவதில் தீவிர நடவடிக்கைகள் எடுப்போம் என்று தான் தெரிவித்துள்ளார். தமிழகம் மதுவில் திளைப்பதற்கு ஜெயலலிதா ஊன்று கோலாக இருந்தார் என்றால், திமுக தலைவர் கருணாநிதி தான் அதற்கு வித்திட்டார் என்பது அனைவரும் அறிந்த உண்மை” என்று தெரிவித்துள்ளனர்.