கோலாலம்பூர், ஜூலை 21 – கடந்த ஜூலை 15ஆம் நாள் நமது செல்லியலில் விண்மீன் எச்டி எனப்படும் அஸ்ட்ரோவின் துல்லிய ஒளிபரப்பு அலைவரிசை சிங்கப்பூரில் கால்பதிப்பது குறித்த பிரத்தியேகக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
அதனைத் தொடர்ந்து ஒரு சில வாசகர்கள் நட்பு ஊடகங்களின் வழி, விண்மீன் மலேசிய அலைவரிசை எனப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது என்ற தோரணையிலும், அதில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் தமிழக நிகழ்ச்சிகள் என்பது போன்ற கண்ணோட்டத்துடனும் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
இதுபோன்ற மலேசியத் தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் முதல் கட்ட முயற்சிகளுக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டுமே தவிர குறுகிய கண்ணோட்டத்துடன் குறைகளை மட்டும் முன்வைக்கக் கூடாது.
அதே வேளையில் தொலைக்காட்சி உலகில் நடந்து வரும் சில உலகளாவிய மாற்றங்களையும், தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் நாம் புரிந்து கொண்டால், விண்மீன், சிங்கை போன்ற அண்டை நாடுகளில் பரவுவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும், எத்தகைய பின்விளைவுகளை பிற்காலத்தில் நமக்குக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் நம்மால் உணர முடியும்.
இதன் தொடர்பில் சில கருத்துக்களையும் வாசகர்களின் பார்வைக்கு முன்வைக்க விரும்புகின்றோம்.
அஸ்ட்ரோவைத் தற்காப்பது நோக்கமல்ல
இங்கே மற்றொன்றையும் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். அஸ்ட்ரோவுக்காக கொடிபிடிக்க வேண்டும் என்பதோ, அவர்களைத் தற்காக்க வேண்டும் என்பதோ அவர்களுக்கு புகழுரை மட்டும் சூட்ட வேண்டும் என்பதோ நமது நோக்கம் கிடையாது.
மாறாக, ஒரு நல்ல முயற்சியை – அதன் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் – குறைகூறக் கூடாது என்பதுதான் நமது நோக்கம்.
அதே வேளையில் அஸ்ட்ரோ மீது மற்ற வகையில் குறைகள் இருந்தால், அவர்கள் திருத்திக் கொள்ள வேண்டிய அம்சங்கள் இருந்தால் அவற்றையும் நாம் தயங்காமல் எடுத்துக் கூறுவோம் – கடந்த காலங்களில் அவ்வாறு பதிவு செய்தும் உள்ளோம் – என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அஸ்ட்ரோ நிர்வாகத்தினரும் இதுபோன்ற குற்றங் குறைகளை சீர்தூக்கிப் பார்த்து அவற்றைக் களைவதற்கான முற்போக்குச் சிந்தனைகள் கொண்டவர்கள்தான் என்பதையும் நாம் உணர வேண்டும்.
டிவி 3 ஒப்பீடு
உதாரணத்திற்கு நமது நாட்டில் செயல்படும் மிகப் பெரிய தனியார் தொலைக்காட்சி அலைவரிசையான டிவி3-ஐ எடுத்துக் கொள்வோம். ஒரு நாள் முழுக்க இந்த தொலைக்காட்சி அலைவரிசையை யாராவது பார்த்திருக்கிறீர்களா?
அப்படிப் பார்த்தால், அதில் ஹாங்காங் நாட்டின் சீன நாடகங்கள், ஹாலிவுட்டின் ஆங்கிலப் படங்கள், ஆங்கில தொலைக்காட்சி நாடகங்கள், இந்தோனிசிய நாடகங்கள், படங்கள், தமிழ் நாட்டின் தமிழ்ப் படங்கள், ஏன் கொரிய படங்கள் நாடகங்கள், தென் அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்கள் எனப் பல்வகைப்பட்ட உள்ளடக்கங்களைப் பார்க்க முடியும். இதை வைத்து டிவி 3 மலேசியத் தொலைக்காட்சி அலைவரிசை அல்ல என நாம் குறை கூறி புறக்கணிக்க முடியுமா?
அதே வேளையில், டிவி 3 தொடக்கப்பட்ட காலத்தில் அந்த டிவி3 அலைவரிசையில் ஹாங்காங்கின் சீன நாடகங்கள் பெருமளவில் மாலைகளில் ஆக்கிரமித்ததையும், அதனை நமது இந்தியர்களும் பார்த்து ரசித்ததையும், அதனால் அரசியல் அரங்கில் சில சர்ச்சைகள் எழுந்ததையும் பலர் மறந்திருக்க மாட்டார்கள்.
ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. கணினிக்குள் – இணையத் தொடர்புகளைக் கொண்டு – நீங்கள் உலகத்தையே கொண்டு வந்து விடக் கூடிய நவீன உலகில் ஓர் அலைவரிசை அதிகமாக இந்திய நாட்டு நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கின்றது என்பதால் அது மலேசிய அலைவரிசையாகிவிடாது எனக் கூறுவதுவம் குறை சொல்வதும் நியாயமல்ல!
துல்லிய அலைவரிசை என்று கூறிக் கொள்வதோடு நின்று விடாமல் நீங்கள் அனைத்து தரப்பு இரசிகர்களும் பார்ப்பதற்கான சுவையான – சுவாரசியமான உள்ளடக்கங்களையும் தர வேண்டும்.
அவ்வாறு தருவதற்கு மலேசியக் கலையுலகம் – மலேசியக் கலைஞர்கள் -தயாராகி விட்டார்களா? நெஞ்சில் கைவைத்து நம்மை நாமே கேட்போம். இல்லை என்ற பதில்தான் வரும்!
சிங்டெல் நிறுவனம்
சிங்கையின் சிங்டெல் நிறுவனம் உலகளாவிய ஒரு மாபெரும் நிறுவனம். சிங்கையின் இணைய சேவைகளையும், விரிவான தொலைத் தொடர்பு சேவைகளையும் வழங்கி வரும் நிறுவனம்.
அவர்கள் பல மாதங்களாக விண்மீன் அலைவரிசையை உன்னிப்பாகக் கவனித்துத்தான் – அதன் உள்ளடக்கங்கள் தங்கள் நாட்டிற்குப் பொருத்தமானதுதானா என்பதை சீர்தூக்கித்தான் தங்கள் நாட்டில் இணைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் நமது உள்நாட்டுத் தமிழ் அலைவரிசையை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பது நமக்குப் பெருமை தருவதுதான்!
சிங்கையில் வாழும் தமிழர்கள் பார்க்கப் போகும் அலைவரிசை என்பதால் அவர்கள் ரசிப்பதற்குரிய உள்ளடக்கம் உள்ளதா என்பதை உறுதிப் படுத்திக் கொண்டுதான் – அவர்கள் விண்மீன் அலைவரிசையைத் தங்களின் நாட்டுக்குள் அனுமதித்திருப்பார்கள்.
அனைத்துத் தரப்பினரும் ரசிக்கக் கூடிய நிகழ்ச்சிகளை விண்மீன் கொண்டிருக்கின்றது என்ற காரணத்தாலும் – சிங்கையில் கணிசமான எண்ணிக்கையில் தமிழகத் தொழிலாளர்களும், நிபுணத்துவப் பணியாளர்களும் பணியாற்றுகின்றார்கள் என்பதையும் – கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் விண்மீனுக்கு சிங்டெல் அனுமதி தந்திருப்பார்கள்.
எனவே, ஓர் அலைவரிசை என்னும் போது அதன் உள்ளடக்கம் இரசிகர்களை கவர முடியுமா என்பதுதான் முக்கியமே தவிர, அது எந்த நாட்டின் நிகழ்ச்சிகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றது என்பது இன்றைய நவீன யுகத்தில் ஒரு பொருட்டே அல்ல.
தமிழ் நாட்டில் வெளியாகும் தமிழ்ப்படங்கள் அதே நாளில் மலேசியாவில் வெளியாவதும் – சில சமயங்களில் ஒரு நாளைக்கு முன்பாகவே வெளியாவதும் – அதனை வரிசை பிடித்து நின்று நாம் பார்த்து மகிழும் இன்றைய காலச் சூழலில் – இனியும் போய் தமிழ்நாட்டு நாடகங்கள் – தமிழ்நாட்டுப்படங்கள் – செய்திகள் – எனப் பிரித்துப் பார்ப்பதும் பேசுவதும் காலத்துக்கு ஒவ்வாத தேவையற்ற செயல்.
தரமான உள்நாட்டு நிகழ்ச்சிகளும் விண்மீனில் உண்டு
அதே வேளையில் விண்மீன் அலைவரிசையில் ஒளிபரப்பாகும் உள்நாட்டு நிகழ்ச்சிகளையும் நாம் பாராட்டத்தான் வேண்டும். உதாரணமாக தினமும் ஒளியேறும் விழுதுகள், மலேசியாவின் பன்முகத் திறன்களையும் – பன்முகச் சூழலையும் நமக்குக் காட்டுகின்றது.
மலேசியக் கலைஞர்களைக் கொண்ட பல நிகழ்ச்சிகளை – பாடல் திறன் போட்டிகளை – நடனக் கலைஞர்களின் திறன்களைக் காட்டும் போட்டிகளை – விண்மீன் ஒளிபரப்பியுள்ளது.
மற்றொரு உதாரணம், தற்போது ஒளியேறிக் கொண்டிருக்கும் உலகத் தரத்திலான, ‘இண்டர்நேஷனல் சூப்பர் ஸ்டார்’ அனைத்துலக பாடல் போட்டி. இதுவும் நமது உள்நாட்டுத் தயாரிப்புத் திறனுக்கான சிறந்த எடுத்துக் காட்டு. ஆனால், அதில் வெளிநாட்டுப் பாடகர்கள் கலந்து கொள்கின்றார்கள் என்பதாலோ, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சினிமாப் பிரபலங்கள் நீதிபதிகள் என்பதாலோ அது நமது உள்நாட்டு நிகழ்ச்சி அல்ல என்றாகி விடுமா?
எனவே, மலேசியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சுயமான – நாமே உருவாக்கிய ஓர் அலைவரிசை கடல்தாண்டி அந்நிய நாடுகளில் கால் பதித்திருக்கும் வரலாற்றுத் தொடக்கங்களுக்கு வாழ்த்து கூறுவோம். வரவேற்பு கூறுவோம்.
அதன் உள்ளடக்கங்கள் எங்கேயிருந்து வருகின்றன என்ற தேவையில்லாத ஆராய்ச்சி வேண்டாம். எத்தகைய உள்நாட்டு நிகழ்ச்சிகள் விண்மீனில் நமக்கு மேலும் கூடுதலாக வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்போம். கருத்து கூறுவோம். மலேசிய நிகழ்ச்சிகளை அதிகமாக்குங்கள் என்று அறைகூவல் விடுப்போம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அத்தகைய உள்நாட்டு நிகழ்ச்சிகளை படைப்பதற்கான திறமைகளை உள்நாட்டுக் கலைஞர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது உள்நாட்டு நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தரம் கூடுவதற்கான வழிமுறைகளை ஆராய்வோம்.
அதை விடுத்து, நமது நாட்டில் உருவான தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை அயல்நாட்டில் கால்பதிப்பதற்கு பாராட்டு கூறுவோம் – அதை கொச்சைப்படுத்திக் குறை கூறவேண்டாம்.
-இரா.முத்தரசன்