கோலாலம்பூர், ஜூலை 21 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பொது விளம்பர ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வந்த லிம் கோக் விங், பதவி விலகிவிட்டதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் லிம் பதவி விலகியுள்ளதாக ‘த மலேசியன் இன்சைடர்’ செய்தி வெளியிட்டுள்ளது.
1எம்டிபி நிறுவனத்தின் 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி, நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில், பரிமாற்றம் செய்யப்பட்டதாக, அண்மையில் வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என்று ஒரு சில தரப்பினர் நெருக்கடி கொடுத்து வந்தனர்.
அதனை எதிர்கொள்ள நஜிப் தடுமாறியதால் தான் லிம் கோக் விங் பதவி விலகியதாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
சரிந்து வரும் நஜிப்பின் ஆதரவை நிலைநிறுத்துவதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் குழுவில் லிம் கோக் விங்கும் ஒருவர்.
பிரதமர் நஜிப், தேசிய அளவில் பயணங்களை மேற்கொண்டு, அடித்தட்டு மக்களின் குறைகளையும் கேட்க வேண்டும் என்பது லிம் கோக் விங் வகுத்துக் கொடுத்த திட்டங்களில் ஒன்று.
கடந்த 1974-ம் ஆண்டு, மலேசியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து அரசாங்கத்தில் பணியாற்றி வருவதாக 69 வயதான லிம் கோக் விங் தெரிவித்துள்ளார்.