புதுடில்லி, ஜூலை 21- வியாபம் ஊழல், லலித் மோடி விவகாரங்களை எழுப்பி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவை தொடங்கியதும் விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் பிரிவுகளில் பட்டம் வென்ற லியாண்டர் பயஸ், சானியா மிர்சா, ஸ்மித் நாகல் ஆகியோருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, லலித் மோடி விவகாரம் குறித்துப் பேசினார். அதில் தொடர்புடையவர்களை நீக்காதது ஏன் என்றும் அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இப்பிரச்சினை குறித்து அவையில் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார். ஆனால், அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அவையை வழிநடத்திய பி.ஜே.குரியன், உறுப்பினர்களை அமைதி காக்குமாறு கூறினார். ஆனால் ஜெட்லியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், கடுமையான கூச்சல் குழப்பம் நிலவியது.
இதையடுத்து அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் மாநிலங்களவை தொடர்ந்து நடைபெற்றது.
அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர் மீண்டும் முழக்கமிட்டனர்.
கட்டுக்கோப்பில்லாமல்,மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கமிட்டதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.