சென்னை, ஜூலை 21- பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில்,”கல்லீரல் அறுவைச் சிகிச்சைக்காக ஜெயலலிதா அமெரிக்காவின், மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் நகரிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் சேர வாய்ப்புள்ளது. எந்த நேரத்திலும் ஜெயலலிதா கிளம்பலாம். அது ஒரு கடினமான அறுவைச் சிகிச்சை” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியசாமி மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
‘டூவிட்டர் இணையதளம் பக்கத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி, முதல்-அமைச்சரின் உடல் நலம் குறித்துத் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார்.எனவே, அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கிறது.