கோலாலம்பூர், ஜூலை 22 – 1எம்டிபி குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பில் அனுப்பப்பட்ட விளக்கம் கோரும் கடிதத்திற்கு ‘த எட்ஜ்’ ஊடகக் குழுமம் அளித்த பதில் கிடைக்கப் பெற்றிருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பதில் கிடைத்திருப்பதை உறுதி செய்த உள்துறை அமைச்சின் பதிப்பு கட்டுப்பாட்டுப் பிரிவின் ( Publications Control and Al-Quran Text Division) தலைவர் ஹாஜிமா நிக் ஜாஃப்பர், அந்தப் பதிலை தற்போது ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளார்.
இது குறித்து உள்துறை அமைச்சு விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் 1ஆம் தேதி எட்ஜ் பத்திரிகையில் 1எம்டிபி குறித்த செய்திகள் வெளியானதையடுத்து, உள்துறை அமைச்சு மேற்குறிப்பிட்ட விளக்கம் கோரும் கடிதத்தை அனுப்பியது.
1எம்டிபி குறித்த தவறான தகவல்களுக்கு அந்தப் பத்திரிகையின் உரிமையாளர்தான் பொறுப்பேற்க வேண்டும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.
மேலும், ‘சரவாக் ரிப்போர்ட்’ இணையதளம் 1எம்டிபி குறித்த தவறான தகவல்களை அளிப்பதாகவும், அத்தகைய தகவல்கள் பின்னர் எட்ஜ் பத்திரிகை உள்ளிட்ட பிற ஊடகங்களில் வெளியாவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
எனினும் உண்மையைக் கண்டறிந்து தெரிவிக்கும் சமூகக் கடமையுடனேயே தாங்கள் செயல்பட்டதாக எட்ஜ் பத்திரிகை தெரிவித்துள்ளது.