கொழும்பு, ஜூலை 22- முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பிரதமர்த் தேர்தலில் படுதோல்வியடைவார் என இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கருணா என்ற விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு வலதுகரம் போன்று செயல்பட்ட கருணா, பின்னர் துரோகியாக மாறியதால் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின்பு மஹிந்த ராஜபக்சேவின் கட்சியில் சேர்ந்து தமிழினத்திற்கு எதிராகச் செயல்பட்டு அமைச்சராகவும் ஆனார்.
இதுநாள் வரை ராஜபக்சேவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த கருணா, இப்போது திடீரென்று இவ்வாறு கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர்த் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத கோபத்தில் தான் இவ்வாறு பேசுகிறார் என்றும், கட்சியின் ரகசியங்களை வெளியிட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
போருக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்சே பல தவறான செயல்களைப் புரிந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள கருணா,
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நிலைமை தற்போது முற்றிலுமாக மாறிவிட்டதாகவும், இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்துக்கு வரும் எனவும் அவர் ஆருடம் கூறியுள்ளார்.