ஸ்ரீ இஸ்கண்டார், ஜூலை 23 – பேராக் மாநிலத் திரையரங்குகளில் திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஜோடியாக தம்பதியர் இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கத் தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்ட செய்தியில், அந்தத் தடை இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என அம்மாநில செயற்குழு உறுப்பினரும் மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகாரக் குழுவின் தலைவருமான டாக்டர் மா ஹாங் சூன் தெரிவித்துள்ளார்.
டி’ மால் என்ற வணிக வளாகத்திலுள்ள லோட்டஸ் திரையரங்கிற்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தடை உத்தரவு, இஸ்லாம் அல்லாதவர்களுக்குப் கிடையாது என்றும் டாக்டர் மா தெரிவித்துள்ளார்.
இந்தத் தடை உத்தரவை பேராக் மாநில மாநகர சபை வெளியிட்டதாகவும் டாக்டர் மா சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனிடையே, பேராக் மாநில மாநகர சபையின் தலைவர் மாட் டான் ஹசான் ‘த ஸ்டார்’ இணையதளத்திடம் கூறியுள்ள தகவலில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற மாநகர சபைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் திரையரங்குகளில் உத்தரவு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை அஸ்ட்ரோ அவானி வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில், இரண்டு இருக்கைகளையும் நடுவில் கைப்பிடி கொண்டு பிரிக்காமல், தம்பதியர் நெருக்கமாக அமர்ந்து படம் பார்ப்பது போலான ‘தம்பதியர் இருக்கை’ திருமணமாகாத இஸ்லாமியர்களுக்கு வழங்க திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தது.
அந்தத் தடை, ஸ்ரீ இஸ்கண்டார் கிளையில் உள்ள லோட்டஸ் திரையரங்கில் மட்டும் தான் என்றும் கூறப்படுகின்றது. மாவட்டக் கவுன்சில் வழங்கிய இந்தத் தடை உத்தரவை திரையரங்கு நிர்வாகம் எதன் அடிப்படையில் ஏற்றுக் கொண்டது என்ற விவரமும் இன்னும் வெளிவரவில்லை.
நாடெங்கிலும் லோட்டஸ் நிறுவனத்தின் பேரில் 25 திரையரங்குகள் செயல்பாட்டில் உள்ளன. பெரும்பாலும் அந்தத் திரையரங்குகளில் இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.