Home கலை உலகம் பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினையால் 27-ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம்!

பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினையால் 27-ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம்!

595
0
SHARE
Ad

File0113சென்னை, ஜூலை 25- பெப்சி தொழிலாளர்கள் சம்பள உயர்வுப் பிரச்சினை காரணமாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வரும் 27-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால், அன்று முதல் படப்பிடிப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு வேண்டி கடந்த மூன்றாண்டு காலமாகவே பெப்சி தொழிலாளர்கள்  போராடி வருகிறார்கள். இது தொடர்பாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சி நிர்வாகிகளுக்கும் இடையே ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

தமிழகத் தொழிலாளர் நல ஆணையாளர் மூலம் 2011-ஆம் ஆண்டில் ஏற்கனவே சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு விட்டதாகவும், ஆனால், சம்பள உயர்வு கேட்கும் பெப்சி தொழிலாளர்கள் பொது விதிகளைச் சரிவரக் கடைப்பிடிப்பதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் அறிவித்த சம்பளத்தைப் பெப்சி தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளாமல், எந்த வித முன்னறிவிப்புமின்றி தன்னிச்சையாகப் புதிய ஊதிய உயர்வினை அறிவித்துவிட, இது அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது.

இதனால்,பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் வரை வருகிற 27-ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும், உள்ளூர் மற்றும் வெளியூர்ப் படப்பிடிப்புகளை ரத்து செய்வது என்றும் தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், மீண்டும் 1997-ஆம் ஆண்டு நடந்த நீண்ட வேலைநிறுத்தம் போல் இது ஆகிவிடுமோ எனத் திரையுலகினர் அஞ்சுகின்றனர்.

இந்த வேலை நிறுத்தம் நீடித்தால், சினிமாத் தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி அனைவரும் பொருளாதார ரீதியில் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.