கோலாலம்பூர், ஜூலை 25 – இசைத்துறை ஜாம்பவான்களான இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் ஆகியோரின் 80,90-ஆம் ஆண்டு பாடல்களைக் கொண்டு ‘இசையும் இசையும்.. ராஜாவும், ரஹ்மானும்’ என்ற மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை ரசிகர்களின் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது மின்னல் பண்பலை.
கடந்த ஜூலை 18-ஆம் தேதி, சனிக்கிழமை, பினாங்கு ஜூருவில் இருக்கும் ஆட்டோ சிட்டியில்-ல் ‘என்ரிகோஸ்’ நிறுவனத்தின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்த பிரமாண்ட நிகழ்வில், விஜய் டிவி சூப்பர் சிங்கர் வெற்றியாளர் திவாகர் மற்றும் பாடகி பார்வதி ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டதோடு, ரசிகர்களுக்குப் பிடித்த பாடல்களைப் பாடி அசத்தினர்.
இவர்களோடு மலேசிய நட்சத்திரங்கள் பாடகி அலிண்டா, இசையமைப்பாளர் சரண் நாரயணன், டர்ஷாயினி, சித்தார்த்தன், சந்தேஷ், ஹெலென், ஜீவா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல்களைப் பாடினர்.
மேலும், அன்பிளக்டு (UNPLUGGED) பாணியில் 80, 90களின் பாடல்களை பாடுவதற்காக விஎம் அன்பிக்களர்ஸ் (VM UNPLUGGERS) மாலினி வினேஷ். வித்தியாசமான நடனத்திற்கு புகழ்ப்பெற்ற வேஹாரா ஆர்ட்ஸ் (VEHARA ARTS)- ன் நடனமும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றது.
அதேவேளையில், நாடறிந்த கலைஞர்களான ஹாவோக் பிரதர்ஸ் (HAVOC BROTHER’S) குழு பல குரல் ஹார்டி பி (HARDE BEE)-ன் படைப்புக்களும் இடம்பெற்றன.
முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில், சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதோடு, நிகழ்ச்சியின் ஊடே ஆடல் பாடல் என அந்தப் பகுதியே திருவிழாக் கோலம் பூண்டதாக நேரில் கண்டவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த மாபெரும் நிகழ்ச்சியில் மின்னல் பண்பலையின் அச்சுப் பதித்த டி-சர்ட் விற்பனை செய்யப்பட்டு அதில் இருந்து வந்த நிதியை, புக்கிட் மெர்த்தாஜாமில் உள்ள அல்மா தமிழ்ப்பள்ளிக்கு 5000 ரிங்கிட் நிதியுதவியும் அளித்துள்ளது மின்னல் பண்பலை.
இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுவதற்கு மின்னல் பண்பலை அறிவிப்பாளர்களும் ஒரு காரணம். கலகலப்பான வர்ணனைகளோடு, நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நடத்திய மின்னல் அறிவிப்பாளர்களை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
படங்கள்: Minnalfm, Amazing Creation photography.