Home நாடு என்னையும், எனது நண்பர்களையும் அடுத்து குறி வைத்துள்ளனர்: மகாதீர்

என்னையும், எனது நண்பர்களையும் அடுத்து குறி வைத்துள்ளனர்: மகாதீர்

702
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 26 – எட்ஜ் குழும பத்திரிகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தானும் தனது நண்பர்களும்தான் அடுத்த இலக்குகள் என நம்புவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

1எம்டிபி குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார் முன்னாள் பிரதமர். மேலும் பிரதமர் மற்றும் அம்னோ தலைவர் பதவியில் இருந்து டத்தோஸ்ரீ நஜிப் விலக வேண்டும் என பகிரங்கமாகக் கூறி வருகிறார்.

இந்நிலையில் எட்ஜ் பத்திரிகை மீது அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்ற கருத்தை தானும் ஏற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

TUN MAHATHIR / BIRTHDAY

பெர்ஜாயா நிறுவனம் டைம்ஸ் ஸ்குவேர் வணிக வளாகத்தில் நடத்திய பிறந்த நாள் விருந்துபசரிப்பில் மகாதீர் தம்பதியர். அருகில் பெர்ஜாயா குழும நிறுவனர் டான்ஸ்ரீ வின்சென்ட் டான், அவரது மகனும் பெர்ஜாயா நிறுவனத் தலைவருமான டத்தோ ரோபின் டான். பின்னணியில் மகாதீரை ஜேம்ஸ்பாண்ட் போல சித்தரித்திருக்கும் திரைப்பட பதாகையைப் பாருங்கள் (படம்: நன்றி – நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்; டுவிட்டர்)  

“ஆமாம்… நிச்சயமாக இந்த நடவடிக்கையை நாம் கண்டிக்க வேண்டும்,” என பெர்ஜாயா டைம்ஸ் ஸ்குவேர் வணிக வளாகத்தில் நடைபெற்ற தமது 90ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுக்குப் பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் மகாதீர் கூறினார்.

“எட்ஜ் மற்றும் எனது நண்பர்கள் அனைவரும் தற்போது இலக்குகள் ஆகியுள்ளோம். ஆனால் எதற்காக குறி வைக்கப்படுகிறோம் என்பதற்கான காரணம் தெரியவில்லை,” என மகாதீர் கூறியதாக ஸ்டார் ஆன்லைன் ஆங்கில இணைய செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

தனது நண்பர்கள் என யாரைக் குறிப்பிடுகிறார் என்பதை மகாதீர் தெளிவுபடுத்தவில்லை. எனினும் இந்தப் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் நியூ ஸ்டிரெய்ட் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் காடிர் ஜாசின் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தனது வலைப்பதிவுகளில் 1எம்டிபியின் செயல்பாடுகளை மிகக் கடுமையாகவும், விரிவாகவும் விமர்சித்து வருகிறார் காடிர் ஜாசின்.

இதற்கிடையே உள்துறை அமைச்சின் தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் செல்ல இருப்பதாக எட்ஜ் நிர்வாகம் அறிவித்திருப்பதை தாம் வரவேற்பதாகவும் மகாதீர்  தெரிவித்துள்ளார்.