கோலாலம்பூர், ஜூலை 27 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது பதவியில் இருந்து இனிதே ஓய்வு பெற வாழ்த்துவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது மகாதீர் இவ்வாறு குறிப்பிட்டார்.
1எம்டிபி விவகாரம் தொடர்பில் பிரதமர் நஜிப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார் மகாதீர். இதற்குப் பதிலடியாக நஜிப்பும், மகாதீரை கடுமையாகத் தாக்கி வருகிறார்.
“அவர் (நஜிப்) இனிதே ஓய்வு பெறுவார் என்றும், தனது ஓய்வுக்காலத்தை இனிதே கழிப்பார் என்றும் நம்புகிறேன்,” என்றார் மகாதீர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமது 62ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் நஜிப். இதே போல் ஜூலை 10-ம் தேதி மகாதீருக்கு 90ஆவது பிறந்தநாள் ஆகும்.
“நாடு பல்வேறு சவால்களை தற்போது எதிர்கொண்டுள்ளது. அதிலிருந்து நாம் நாம் மீள்வோம் என்று நம்புகிறேன். இதுவே எனது பிறந்தநாள் விருப்பம். அனைத்து பிரச்சினைகளும் விரைவில் முடிவுக்கு வரும்,” என்றார் மகாதீர்.
எனினும் இம்முறை, என்னென்ன பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டுள்ளது, எவற்றில் இருந்து மீட்சி பெறும் என்று அவர் குறிப்பிட்டுக் கூறவில்லை.
அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்காவுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு சரிவு என பல்வேறு சவால்களை நாடு தற்போது எதிர்கொண்டுள்ளது.