லண்டன், ஜூலை 27 – உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. ‘மாஸ்க்யூரிக்ஸ்’ (Mosquirix) என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, பாதுகாப்பானது தான், மலேரியா வராமல் தடுக்க குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம் என ஐரோப்பிய ஒன்றியம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த ஒப்புதல் மூலம் பல ஆண்டு கால ஆராய்ச்சிக்கு பலன் கிடைத்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டில் மட்டும், உலகம் முழுவதும், கொசுக்கள் மூலம் பரவும் மலேரியா நோய் பாதிப்பினால் 6 லட்சத்து 27 ஆயிரம் பேர் பலியாகினர். இந்த எண்ணிக்கையில், 5 லட்சத்து 62 ஆயிரம் பேர் ஆப்பிரிக்க மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இக்கொடிய உயிர்க்கொல்லி நோய்க்கு அதிக அளவில் பலியாகி இருப்பது குழந்தைகள் தான். இந்த நோயிலிருந்து மக்களைக் காப்பாற்ற, பல்வேறு ஆராய்ச்சிகளை வல்லரசு நாடுகள் முயற்சித்து வந்தன.
இந்நிலையில் தான், இங்கிலாந்து மருத்து தயாரிப்பு நிறுவனமான ‘கிளாக்ஸோ ஸிமித்லைன்’ (Glaxo SmithKline) மலேரியா நோய்க்கிருமிகளை அழிக்கும் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் பில்&மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கும் பெரும் பங்குள்ளது. இந்த கண்டுபிடிப்பிற்கு கேட்ஸின் அறக்கட்டளை பெரிய அளவில் நிதி உதவி செய்துள்ளது.
இதற்கிடையே, மாஸ்க்யூரிக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால் அவற்றை பெரிய அளவில் கொள்முதல் செய்ய உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த அமைப்பு பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. மலேரியாவால் எந்தெந்த நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அந்த நாடுகளுக்கு எவ்வளவு தடுப்பூசிகளை அனுப்பி வைப்பது? அதற்கு எவ்வளவு கொள்முதல் செய்ய வேண்டும்? என்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை உலக சுகாதார நிறுவனம் தயாரித்து வருகிறது.