கான்பூர், ஜூலை 27- உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஏழைப் பெண்ணின் கணக்கில், பாரத ஸ்டேட் வங்கி 95000 கோடி ரூபாயை வரவு வைத்து,அந்தப் பெண்ணை ஒருநாள் கோடீஸ்வரியாக்கிய விநோதம் நடந்துள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் ஊர்மிளா. வீட்டு வேலைக்குச் சென்று பிழைக்கும் பரம ஏழை.
மத்திய அரசின் ‘ஜன்தன்’ திட்டத்தில் சேர்வதற்காகப் பாரத ஸ்டேட் வங்கியில் இருப்புத்தொகை 2000 ரூபாய் செலுத்தி, சேமிப்புக் கணக்கு தொடங்கினார்.
ஆனால், பல மாதங்களாக எந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்யவில்லை.
இந்நிலையில், ஊர்மிளாவின் கைபேசிக்கு நேற்று பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து, ‘அவருடைய வங்கிக் கணக்கில் 9.99 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக’ ஒரு குறுஞ்செய்தி வந்தது. அவருக்கு ஆச்சரியம்!
சற்று நேரம் கழித்து, 9.97 லட்சம் ரூபாய் கழிக்கப்பட்டதாக மற்றொரு குறுஞ்செய்தி வந்தது. மீண்டும் ஆச்சரியம்!
ஒன்றும் புரியாமல் வங்கிக்கு நேரிடையாகச் சென்று விவரம் கேட்டார். ஊர்மிளாவின் வங்கிக் கணக்கைக் கணினியில் சோதித்துப் பார்த்த வங்கி ஊழியர், “உங்கள் சேமிப்புக் கணக்கில் 95,711 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டிருக்கிறது” என்றார்.
தவறுதலாகத் தன் கணக்கில் இவ்வளவு பனத்தைப் போட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. எப்படியோ ஒரே நாளில் தான் கோடீஸ்வரியாக மாறிவிட்டதாக எண்ணி மகிழ்ந்தார். ‘கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும்’ என்பார்களே…அதுமாதிரி தெய்வம் நமக்கு வங்கிக் கணக்கில் சேர்த்துவிட்டது என்று ஆனந்தப்பட்டார்.
ஆனால், அவரது மகிழ்ச்சி கொஞ்ச நேரம் கூட நீடிக்கவில்லை.
அடுத்து அந்த வங்கி ஊழியர் சொன்ன தகவல் தான் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்பதைப் போல், ‘வங்கிக்கு வந்தது கைக்கு வரவில்லை’ என்பது போல் ஆகிவிட்டது.
“செயல்படாத சேமிப்புக் கணக்கை முடக்க, இதுபோன்ற முறை கையாளப்படுகிறது. இனி, உங்கள் வங்கிக் கணக்கை நீங்கள் பயன்படுத்த முடியாது” எனச் சாதாரணமாகச் சொன்னார் அவர்.
அத்தனை கோடியும் நமக்கு என்று எண்ணிய ஊர்மிளா கடைசியில்,”என்னுடைய 2,000 ரூபாய் பணமாவது கிடைக்குமா?” என்று அழும் நிலைக்கு ஆளானார்.
பல்வேறு குளறுபடிகளுக்குப் பின்னர், ஊர்மிளாவின் சேமிப்புக் கணக்கில் சரியான தொகையான 2,௦௦௦ ரூபாயை மட்டும் சேர்த்து, இனி அவர் அந்தச் சேமிப்புக் கணக்கைப் பயன்படுத்தலாம் என்றனர்.
அதன்பின்பு, “அப்பாடா! உள்ளதாவது மிஞ்சியதே” என்று நிம்மதிப் பெருமூச்சுடன் போனார் ஊர்மிளா.