கோவை, ஜூலை 27- கோவை கால்நடைப் பராமரிப்பு நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்ளச் சென்ற விஷாலுக்குக் கருப்புக் கொடி காட்டிய 57 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாடுகளைத் துன்புறுத்திக் கனரக வாகனங்களில் ஏற்றிச் சென்று கொல்வதைத் தடுக்கும் விதமாக, கோவை கால்நடைப் பராமரிப்பு நல அறக்கட்டளையில் சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் கோவையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள நடிகர் விஷால் கோவை வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துச் சமூக நீதி இயக்கம் மற்றும் தலித் விடுதலைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டினர்.
கருப்புக் கொடியுடன் விஷாலை நோக்கி ஓடியதால், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
இந்தக் கருப்புக் கொடிப் போராட்டம் குறித்துச் சமூக நீதி இயக்கத் தலைவர் பன்னீர் செல்வம் கூறியதாவது:
“மாட்டிறைச்சி உண்பது என்பது இப்போது சாதாரண விசயமாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல், உணவு விசயத்தில் யாரும் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்படி இருக்கும் போது, மாடுகளைக் கொல்லக் கூடாதென்றும், மாட்டிறைச்சி உண்ணக் கூடாதென்றும், மாடுகள் வதைச் சட்டத்தை அமல்படுத்த முயல்பவர்களுக்கு விஷால் ஆதரவாகச் செயல்படுகிறார்.
இது போன்ற நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ந்து கலந்து கொண்டால், அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம். அவர் நடிக்கும் திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளை முற்றுகையிட்டு, அவரது படங்களைத் திரையிட விடாமல் தடுப்போம்.
இந்தக் காரணத்திற்காகவே அவருக்கு நாங்கள் கருப்புக் கொடி காட்டி எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்”என்றார்.