புதுடெல்லி, ஜூலை27- பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்.காவல்துறையினர் 8 பேர் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிகள் இரண்டு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தினாநகர் காவல் நிலையத்தில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தீவிரவாதத் தாக்குதலுக்குக் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் மூலம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
“தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபஙகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன் தீவிரவாதத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். குர்தாஸ்பூரில் நிலைமை விரைவில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால்,“தீவிரவாதிகள் எல்லையில் இருந்தே வந்துள்ளனர்.அது உண்மையாக இருக்குமானால், பாதுகாப்புp படையின் மெத்தனமும், உளவுத்துறையின் அசட்டையுமே இதற்குக் காரண்மாகும்” என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனந்த் சர்மா குற்றம்சாட்டியுள்ளார்.