சென்னை, ஜூலை 27- தெருநாய்களைக் கொல்ல வேண்டும் என்று கூறிய நடிகர் மோகன்லாலுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி ஆகியோர் நடித்திருக்கும் ‘சகலகலா வல்லவன்’ படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்றிரவு நடந்தது. அதில் திரிஷா கலந்து கொண்டார்.
திரிஷா நாய்கள் மீது மிகவும் பிரியம் உள்ளவர். மேனகா காந்தி, அமலா போல் மிருக வதைச் சட்டத்தைத் தீவிரமாக ஆதரிப்பவர்.‘புளு கிராஸ்’ உறுப்பினரும் கூட.
அண்மையில், தெரு நாய்களால் பலருக்குத் தொந்தரவும் ஆபத்தும் ஏற்படுவதாகாகக் கூறி, அவைகளைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று நடிகர் மோகன்லால் கருத்துத் தெரிவித்திருந்தார். இதுபற்றித் திரிஷாவிடம் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டனர்.
அதற்கு அவர், “தெரு நாய்களைக் கொல்லச் சொல்வது பாவம்; ஈவு–இரக்கமற்ற செயல். அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது .தெருநாய்களை ஏன் கொல்ல வேண்டும்?அவைகளைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் விட்டு விட வேண்டியது தானே? கொல்ல வேண்டிய அவசியம் இல்லையே?
சென்னை செனடாப் சாலையில் என் வீட்டு அருகில் கூட 10 தெரு நாய்கள் அலைகின்றன. அவைகளைப் பாதுகாப்பாக இடத்தில் கொண்டு போய் விடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று தனது கருத்தை மோகன்லாலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.